ஆயுதச்சந்தையில் இருக்கும் எமகாதகர்களை பற்றி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். அனுபவமற்றவர்கள் இந்த உலகத்திற்குள் புகுந்தால், புங்குடுதீவாருக்கு புகையிலை விற்றவரின் கதையாகத்தான் முடியும். கட்டியிருக்கும் கோவணத்தையும் உருவிக்கொண்டு போய்விடுவார்கள்.
இந்த தொடரில் காலஒழுங்கின்படி வந்தால், இப்பொழுது கே.பி எப்படி சர்வதேச ஆயுதக்கடத்தல்காரர்களுடன் தொடர்பை ஏற்படுத்தினார், எப்படி ஆயுதங்கள் வாங்கினார், எப்படி அவற்றை இலங்கைக்கு அனுப்பினார், எந்தெந்த நாடுகள் புலிகளுடன் உறவில் இருந்தன என்பதை பற்றித்தான் எழுத வேண்டும். ஆனால் ஒரு சிறு பாய்ச்சலாக பாய்ந்து, கே.பிக்கு பின்னரான புலிகளின் ஆயுதக்கடத்தல் பற்றிய விடயங்களை எழுதவுள்ளோம். அனுபவமற்றவர்கள் ஆயுதக்கடத்தல்காரர்களுடன் தொடர்பை ஏற்படுத்தினால் என்ன நடக்குமென்பதற்கான உதாரணத்தை புரியவைக்கவே இதை இப்பொழுது குறிப்பிடுகிறோம். இதன் பின்னர் கே.பியின் ஆரம்பகாலம் பற்றி குறிப்பிடலாம்.
சிலபல காரணங்களால் கே.பியை புலிகள் ஆயுதக்கொள்வனவு, சர்வதேச விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பில் இருந்து ஒதுங்கியிருக்க செய்தார்கள். (அந்த சமயத்தில் கே.பி ஒரு சென்டிமென்டான கடிதத்தை பிரபாகரனிற்கு எழுதியிருந்தார். அந்த சம்பவங்களை பற்றி பின்னர் குறிப்பிடுகிறோம்) இதன்பின் அனைத்துலக தொடர்பக பொறுப்பாளர் கஸ்ரோ (இவர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர். யாழ் மாவட்ட துணைத்தளபதியாக இருந்தவர். 1991இல் ஆனையிறவு யுத்தத்தில் இடுப்பின் கீழ் செயலிழந்து, இறுதிவரை சக்கர நாற்காலியிலேயே நடமாடினார். ஹாட்லிக்கல்லூரியின் பழைய மாணவன்) மற்றும் பொட்டம்மான், சூசையின் ஆட்களிடம் ஆயுதக்கொள்வனவு, வெளிநாட்டு விவகாரங்கள் கையளிக்கப்பட்டன.
இப்படி புதிதாக அந்த பொறுப்பை ஏற்றவர்கள் தென்னாசியா, ஐரோப்பிய, கனடாவில் தங்கியிருந்தார்கள். இவர்கள் யாரெனில், 1996 தொடக்கம் 2000 ஆண்டுகளில் கடல் மார்க்கமாக வன்னியிலிருந்து அனுப்பப்பட்டு அந்த நாடுகளில் கல்விகற்றவர்கள். கே.பியை போல ஆயுதக்கடத்தல் உலகில் மெல்லமெல்ல நுழைந்தவர்கள் அல்ல. கே.பியின் கதை வேறு. அவர் ஒரு கைக்குண்டை, கைத்துப்பாக்கியை வாங்க அலைந்து திரிந்து, பல இடங்களில் அடிபட்டு இந்த உலகத்தை படித்தவர். அதனால்தான் சந்துபொந்தெல்லாம் அத்துபடியாக வைத்திருந்தார். அவர் ஏமாந்தது ஆரம்பகாலத்தில். கொஞ்ச பணம் விரயமாகியிருக்கும். ஆனால், கஸ்ரோ, பொட்டம்மானின் ஆட்கள் அப்படியல்ல. அவர்கள் அந்தந்த நாடுகளில் பல்கலைகழகங்களில் படித்துவிட்டு, கூகிளில் குரூஸ் ஏவுகணையின் படத்தை நகல் எடுத்துக்கொண்டு நேரடியாக ஏவுகணை வாங்க டீல் செய்தவர்கள்.
2006 தொடக்கம் 2007இல் கணிசமான புலிகளின் ஆயுதக்கப்பல்கள் அழிக்கப்பட்டு விட்டன. எஞ்சியவை தென்னாசியாவிற்கு அப்பால் தரித்து நின்றன. இனி கப்பலில் ஆயுதங்களை கொண்டு வருவதென்பது சாத்தியமேயில்லாத விடயம் என்பது புலிகளிற்கு தெரிந்து விட்டது. கஸ்ரோவின் ஆட்கள் பலர் பல நாடுகளில் புலனாய்வுபிரிவுகளால் கைது செய்யப்பட்டு விட்டனர். வன்னியில் யுத்தம் இறுகிவிட்டது. ஏதாவது புதிய ஆயுதங்கள் வந்தால்தான் மாற்றம் நிகழும்.
பொட்டம்மான் ஒரு திட்டம் தீட்டினார். விமானம் மூலம் வன்னிக்கு ஆயுதம் கொண்டு வரலாம்!
ஐரோப்பாவில் இருந்த பொட்டம்மானின் ஆட்கள் ஒரு உக்ரேனியனை பிடித்தார்கள். நீண்டகாலம் ஆயுதக்கடத்தலில் இருக்கிறான் என்றுதான் அவர்களிற்கு அறிமுகமாகினான்.
அப்பொழுது புலிகளிற்கு உக்ரேன் நிறைய ஆயுதங்கள் கொடுத்தது. புலிகளிற்கு முதன்முதலில் விமானத்தை தாக்கும் இயங்குநிலை ஏவுகணை கிடைத்தது உக்ரேனிலிருந்துதான். யுத்தம் முடிவில் சில ஏவுகணைகளை இராணுவம் கைப்பற்றியிருந்தது. அவையெல்லாம் புலிகள் உக்ரேனில் வாங்கியவை. புலிகள் உக்ரேனி
இதன்மூலமே சில விமானங்கள், ஹெலிகொப்ரர்களை சுட்டுவிழுத்தியிருந்தனர். பின்னர், இலங்கை அரசிடம் புலிகளிற்கு என்ன ஏவுகணை வழங்கினோம் என்பதை தெரிவித்து, அதற்கான எதிர்ப்பு உபகரணங்களை விற்ற வியாபார தந்திரத்தையெல்லாம் உக்ரேன் கையாண்டது.
சில ஏவுகணைகள், ஆட்லறி செல்கள், ரோபிடோக்கள் உள்ளிட்ட ஆயுதங்களைதான் புலிகள் வாங்க விரும்பினார்கள். தேவையான ஆயுதங்களின் பட்டியலை வாங்கிப்பார்த்த உக்ரேனியன், இதெல்லாம் ஒரு மேற்றரேயில்லை. ஆனால் காசு உடனே வைக்க வேண்டுமென்றான். டீல் பேசிய புலனாய்வுத்துறைக்காரர்கள் உடனே பொட்டம்மானிடம் விடயத்தை சொன்னார்கள். பொட்டம்மான் பிடிகொடுக்காமல் பதில்கொடுத்தார். காசை முதலில் கொடுத்து ஏமாந்து விடக்கூடாது. அதற்காக காசை கடைசியில்தான் தருவோம் என அடம்பிடித்து டீலை குழப்பவும் வேண்டாம். களத்தில் உள்ளவர்களிற்குத்தான் நிலவரம் தெரியும், அவதானமாக நடக்க வேண்டும் என்றார்.
ஆயுதங்களை அனுப்பிய பின்னர் காசு தரலாமென புலிகள் சொல்ல உக்ரேனியன் ஒரேயடியாக மறுத்து விட்டான். ஆயுதம் வாங்க, விமான நிலைய அதிகாரிகளை கைக்குள் போட தேவையான காசை பட்டியல்படுத்தி அந்த பணம் முற்பணமாக தேவை. இல்லாவிட்டால் இந்த டீலிற்கு தான் வரலில்லையென்றுவிட்டான்.
வன்னிக்கு ஒரு விமானத்தில் ஆயுதம் அனுப்பினால் அந்த விமானம் திரும்பி வருமென்பதற்கு உத்தரவாதமில்லை. அதனால் விமானங்களை வாடகைக்கு தர எந்த நிறுவனமும் சம்மதிக்கவில்லை. ஆக, விமானமொன்றும் வாங்க வேண்டும். இதற்கு உக்ரேனியனே ஒரு யோசனை சொன்னான்.
தனக்கு தெரிந்த சில ஏஜெண்ட்கள் மூலம் உக்ரேனிய நிறுவனமொன்றிடம் உள்ள ஆகப்பழைய அவ்ரோ விமானமொன்றை வாங்கலாமென்றான். இனி இரும்புக்குத்தான் பயன்படுத்தலாமென்ற நிலையில் உள்ளதை வாங்கினால் நட்டமுமில்லை, இலகுவாக வாங்கவும் முடியுமென்றான். அங்குள்ள புலிகளும் அதற்கு சம்மதித்தார்கள். ஆயுதம், விமானம் வாங்க, விமானநிலைய ஊழியர்களை கைக்குள் போட தேவையான பணத்தின் வழங்கினார்கள்.
இதற்குள் இடையீடாக இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும். விடுதலைப்புலிகள் இரண்டு பெரிய விமான ஓடுபாதைகளை பாவித்தார்கள். இரணைமடுவிற்கு அப்பால் பனிக்கன் குளத்திற்கு அருகிலும், கேப்பாபிலவிலும். புலிகளின் சாதாரண சிலின் ரக விமானங்களிற்கு எதற்கு அத்தனை பெரிய ஓடுபாதைகள்?
புலிகளின் சிலின் விமானங்கள் தாக்குதல் பறப்பை செய்தபோதோ, அல்லது திரும்ப வந்து தரையிறங்கும்போதோ இந்த ஓடுதளங்களை பாவித்ததேயில்லை. இப்போது இராணுவத்தின் கையில் உள்ள- அவர்கள் வெளியில் தகவல் சொல்லாத- வேறும் சில ஓடுதளங்கள் புலிகளிடம் இருந்தன. சிலின் போன்ற சிறிய ரக விமானங்களிற்கான சிறிய தளங்கள்.
2000களில் இருந்தே புலிகள் பெரிய ஓடுதளங்களை அமைக்க தொடங்கியது, கடல்வழி விநியோகம் தடுக்கப்பட்டால், விமானங்கள் மூலமாக ஆயுதங்களை கொண்டு வருவதற்காகவும் இருக்கலாம். இது ஒரு ஊகம் மாத்திரமே. ஏனெனில், கடல்வழி விநியோகங்கள் நெருக்கடியாக, புலிகளின் அடுத்த தெரிவாக வான்வழி விநியோகமே இருந்தது. 2007இலேயே புலிகள் அந்த தெரிவிற்கு சென்றிருந்தார்கள்.
ஆயுதங்களுடன் வரும் விமானத்தை இரணைமடுவில் தரையிறக்குவதென புலிகள் முடிவெடுத்தனர்.
உக்ரேனிலிருந்து புறப்பட்டு, தென்னாசிய நாடொன்றில் தரித்து எரிபொருள் நிரப்பி ஒரு அதிகாலை நேரம் இரணைமடுவில் விமானம் இறங்குவதாக திட்டமிடப்பட்டது.
வாங்கிய ஆயுதங்கள் என ஒரு களஞ்சியசாலைக்கு புலிகளை அழைத்து சென்று உக்ரேனியன் காட்டினான். சில நாட்களின் பின்னர் உக்ரேனிலுள்ள விமான நிலையமொன்றிற்கு புலிகளின் பிரதிநிதிகளை அழைத்து சென்று தரித்து நின்ற அவ்ரோ விமானமொன்றை காண்பித்தான். விமானத்தில் ஏறி ஆயுதங்களை பார்க்க புலிகள் விரும்பியபோதும், உக்ரேனியன் சாமர்த்தியமாக தவிர்த்துவிட்டான்.
தற்போது கடமையில் உள்ள ஒருவன் சிக்கலானவன், விமானத்தில் ஏறினால் எல்லா திட்டமும் சிக்கலாகிவிடும் என்றான். எப்படியோ விமானநிலையத்திற்குள் அழைத்து சென்றிருக்கிறானே, அதனால் மற்றதெல்லாவற்றையும் கச்சிதமாக செய்வான் என புலிகளின் பிரதிநிதிகள் நம்பினார்கள். ஒப்ரேசன் சக்ஸஸ் என்ற தகவல் வன்னிக்கு அனுப்பப்பட்டது!
குறிப்பிட்ட நாளில் விமானம் அங்கிருந்து புறப்பட்டது.
இரணைமடுவில் விமானம் தரையிறங்கும் என குறிக்கப்பட்டிருந்த நேரத்திற்கு சற்று முன்னதாகவே புலிகளின் சில முக்கிய தளபதிகள் நேரில் சென்றிருந்தனர். அவர்களில் பொட்டம்மானும் ஒருவர். விமானம் தரையிறங்குவதற்கான நேரம் நெருங்கி, ஒரு சில நிமிடங்கள்தான் இருந்தது.
அந்த காலத்தில் விமானப்படையின் கிபிர், மிக் மிகையொலி விமானங்கள் புலிகளிற்கு சிம்மசொப்பமனமாக விளங்கின. புலிகளின் முகாம்கள் மீது இவை நடத்திய தாக்குதலில் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டன. இதற்கு பின்னர் புலிகள் ஒரு மாற்று ஏற்பாடு செய்தனர். மன்னாருக்கு சமீபமாக புலிகளின் ராடர் நிலையம் நிறுவப்பட்டு, விமானங்களின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டது. தாக்குதல் விமானங்கள் வன்னியை நோக்கி புறப்பட்டால் அனைத்து முகாம்களிற்கும் எச்சரிக்கை பறக்கும் ஏற்பாடொன்றை புலிகள் செய்திருந்தனர். அதனால் கட்டுநாயக்காவிலிருந்து விமானங்கள் புறப்பட, புதுக்குடியிருப்பில் உள்ள முகாம்களில் இருந்த போராளிகளும் முகாம்களை விட்டு வெளியேறி விடுவார்கள். அல்லது பதுக்குகுழிக்குள் சென்றுவிடுவார்கள். விமானம் வருவதற்கு ஐந்து நிமிடங்களிற்கு முன்னராவது இந்த எச்சரிக்கை வந்துவிடும்.
வன்னியில் திடீர் தாக்குதலை நடத்துவதற்கு கடல்வழியாக பயணித்து, திடீரென்றுதான் நிலப்பரப்பிற்குள் ஊடுருவும் வழக்கத்தையும் இலங்கை விமானப்படை வைத்திருந்தது. எதிர்பாராத சமயத்தில், உச்சந்தலையில் குண்டு வீச வேண்டுமென்பதே விமானப்படையின் நோக்கமாக இருந்தது.
இரணைமடுவில் ஆயுத விமானத்திற்காக காத்திருந்த தளபதிகளிற்கும் இந்த எச்சரிக்கை வந்தது.
ஆயுத விமான விபரம் மிக இரகசியமாக இருந்ததால், ராடர் நிலையத்தில் இருந்தவர்களிற்கோ, அந்த எச்சரிக்கையை பகிர்ந்தவர்களிற்கோ விசயம் தெரிந்திருக்காது. ஒரு விமானம் வருகிறது என்றளவில் மட்டும்தான் தெரிந்திருக்கும்.
முல்லைத்தீவு கடல் மார்க்கமாக நுழையும் நமது விமானத்தை அறியாமல் எச்சரிக்கை தருகிறார்களா, அல்லது கட்டுநாயக்காவிலிருந்து வரும் விமானப்படை விமானத்திற்குத்தான் எச்சரிக்கை தருகிறார்களா என தெரியாமல் தளபதிகள் குழம்பிவிட்டனர்.