இன்று நடைபெற உள்ள இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியில், தன்னை அதிரடி நாயகனாக மாற்றிய விசாகப்பட்டினம் மைதானத்தில் டோனி களமிறங்க உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டோனி, தனது முதல் சதத்தை விசாகப்பட்டினம் மைதானத்தில் அடித்தார். 13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த போட்டியை யாராலும் மறந்திருக்க முடியாது.
கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிரான அந்த போட்டியில், இந்திய அணி முதல் துடுப்பாட்டம் செய்தது.
தொடக்க வீரர்களாக சேவாக்கும், சச்சினும் களமிறங்கினர். ஆனால், சச்சின் டெண்டுல்கர் 2 ஓட்டங்களிலேயே ரன் அவுட் ஆனார். அவருக்கு பின்னர் ராகுல் டிராவிட் தான் களமிறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த போட்டியில் 7வது வீரராக களமிறங்கிய டோனியை களத்தில் இறக்கினார் அணித்தலைவர் கங்குலி.
கங்குலியின் இந்த முடிவு டோனியின் வாழ்க்கையையே மாற்றியது. அந்தப் போட்டியில் டோனி அதிரடியாக 148 ஓட்டங்கள் குவித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதன்மூலம், இந்திய அணி 356 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 298 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
அதன் பின்னர், விசாகப்பட்டினம் மைதானத்தில் 4 போட்டிகளில் விளையாடிய டோனி 250 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் அவரது சராசரி 80 ஆகும். இந்நிலையில் இதே மைதானத்தில் இன்று டோனி மீண்டும் விளையாட உள்ளார்.
இதனை பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ராஜா திரும்ப வந்துவிட்டார்’ என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளது. அத்துடன் டோனியின் புகைப்படங்களையும் இதில் பதிவிட்டுள்ளது.