சவுதி பத்திரிகையாளர் கொலை வழக்கில் புதிய திருப்பமாக அவரது உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி வீட்டிலுள்ள தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவை மையமாகக் கொண்ட பத்திரிகை ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. 59 வயதான சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளதோடு, அவரது முகம் அடையாளம் தெரியாத வகையில் சிதைக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் பாகங்கள் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
அதேபோல் துருக்கியின் ரோடினா கட்சியின் தலைவரான Dogu Perincekம் ஜமாலின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஜமாலின் கொலைக்கு சவுதி அரேபியா சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டிய துருக்கி அதிபர் எர்டோகன், இந்தக் கொலை சம்பவத்தில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும், சம்பவத்தில் தொடர்புடைய 18 பேரையும் ரியாத் ஒப்படைக்க வேண்டும் கூறியதைத் தொடர்ந்து இந்த செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர் ஜமால் என்பது குறிப்பிடத்தக்கது.