தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமியை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து அடித்து சூடு வைத்ததாக 16 வயது சிறுவன், பெண் ஒருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவையாறைச் சேர்ந்த 14 வயது சிறுமி செல்போனை திருடிவிட்டதாக கூறி அக்கம்பக்கத்தில் வசித்து வந்த 5 பேர் சிறுமியை நிர்வாணமாக்கி, மரத்தில் கட்டி வைத்து, அடித்து, சூடு போட்டு துன்புறுத்தியுள்ளனர்.
5 பேரும் சென்றுவிட கட்டுகளை பிரித்து விட்டு வாழைத்தோப்பில் மறைந்து உயிர் தப்பிய சிறுமி, தோப்பிற்கு வந்த விவசாயி மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுமி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆறு மாதங்களாக பாலியல் துன்புறுத்தல்
இது தொடர்பாக திருவையாறு மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை அளித்துள்ள புகாரில் தனது மகளை 16 வயது சிறுவன் 6 மாதங்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும், இவ்விவகாரம் அறிந்த சிறுவனின் உறவினர்களான 3 ஆண்கள் தனது மகளை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், மகேந்திரன், வித்யா ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். 16 வயது சிறுவன் சிறார் சீர்திருப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான்.