ஜி.ஜி.பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் சம்பந்தர் போன்ற அடுத்தடுத்து வந்த தலைவர்களால் தமிழ் மக்களுக்கு இதுவரை என் எந்தவொரு தீர்வும் பெற முடியவில்லை.
இதற்கு காரணம் அவர்களின் தவறு அல்ல. மாறாக அவர்கள் முன்னெடுத்த பாராளுமன்ற பாதையின் தவறாகும்.
அதேபோல் அடுத்து விக்கினேஸ்வரன் இவர்களின் இடத்திற்கு வந்து இவர்கள் காட்டிய பாதையில் சென்றால் அவராலும் எந்தவொரு தீர்வையும் பெறமுடியாது என்பதே உண்மையாகும்.
மேலும், பாராளுமன்ற பாதை மூலம் சம்பந்தர் அய்யா பெற முடியாத தீர்வை தன்னால் எப்படி பெற முடியும் என்பதை முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் இதுவரை மக்களுக்கு விளக்கவில்லை.
மக்களுக்கு அபிவிருத்தியைவிட உரிமைதான் முக்கியம் என்று கூறிய இந்த தலைவர்கள் தமக்கு சொகுசு வாகனம், சொகுசு பங்களா போன்ற சலுகைகளை பெறுவதற்கு தயங்கவில்லை.
மேலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினர் கூட மக்களுக்கு உரிமை கிடைக்கும்வரை தனக்கு சலுகை எதுவும் தேவையில்லை என்று கூற முன்வரவில்லை.
இப்போது இவர்கள் என்னத்தை சாதித்துவிட்டதாக அல்லது என்னத்தை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தவிட்டதாக எண்ணி; மாலையும் களுத்துமாக மக்கள் முன் வருகிறார்கள். உண்மையில் இவர்களுக்கு விரட்டி விரட்டி வெளுக்க தோனுது! இவர்களின் அதிகார திமிரை அடக்க தோனுது.
மேலும் கடந்த 60 வருட வரலாற்றில் பாராளுமன்ற பாதை மூலம் தமிழ் மக்கள் ஒரு மயிரையும் பெற முடியாது என்பதை அனுபவபூர்வமாக அறிந்துள்ளார்கள்.
மாகாணசபை உட்பட சில உரிமைகள் கிடைத்துள்ளன என்றால் அது ஆயுதப் போராட்டத்தினால் மட்டுமே கிடைத்தவை என்பதை எவரும் மறுக்க முடியாது.
மக்கள் முன் உள்ள சில கேள்விகளும் பதில்களும்
போராட்டம் அவசியமா?
நாம் என்ன காரணங்களுக்காக போராட்டத்தை ஆரம்பித்தமோ அதில் ஒன்றுகூட இன்னும் தீர்க்கப்படவில்லை.
எனவே எமக்குரிய தெரிவு ஒன்றில் எந்த உரிமையும் இன்றி அடிமையாக கிடந்து படிப்படியாக அழிவது இல்லையேல் போராடி உரிமைகளை பெறுவது
ஆயுதப் போராட்டம் அழிவைத்தானே தரும்?
இழப்பின்றி புரட்சி இல்லை என்பது உண்மைதான். ஆனால் சிறந்த தலைமை என்பது இயன்றளவு இழப்பை குறைத்து வெற்றியை பெற்றுக் கொடுப்பது.
எனவே அதிக அழிவு ஏற்படுகிறது என்றால் அது தலைமையின் தவறேயொழிய ஆயுதப் போராட்டப்பாதையின் தவறு அல்ல. உதாரணமாக வாகனங்கள் மூலம் விபத்து எற்படுகின்றது என்பதற்காக யாரும் வாகனங்கள் தவறு என்று ஒதுக்குவதில்லை, மாறாக அதை ஓட்டியவர்களின் தவறு என்றே கூறப்படுகிறது அல்லவா!
புலிகளாலேயே வெல்லமுடியாத நிலையில் இனி யாரால் ஆயுதப் போராட்டத்தில் வெல்ல முடியும்?
முதலாவது, புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனித்தார்களேயொழிய ஆயுதப் போராட்டத்தை பயனற்றது என்று எந்தவொரு இடத்திலும் கூறவில்லை.
இரண்டாவது, புலிகளின் ஆயுதப் போராட்டம் வெற்றி பெறவில்லை என்பதால் அது தோல்வியடைந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை. ஏனெனில் போராட்டம் ஒருபோதும் தோல்வியைக் கொடுப்பதில்லை.
மூன்றாவது, ஆயுதப் போராட்டம் என்பது தனியே புலிகளின் போராட்டம் மட்டுமன்று. அது மக்களின் போராட்டம். ஏனெனில் எந்தவொரு ஆயுதப் போராட்டமும் மக்கள் ஆதரவின்றி ஒருநாள்கூட நீடிக்க முடியாது.
ஆயுதப் போராட்டம் பயங்கரவாதம் இல்லையா?
முதலாவது, ஆயுதப் போராட்டம் பயங்கரவாதம் என்றால் அதற்கு ஆயுதம் ஏந்தும் மக்கள் பொறுப்பு அல்ல மாறாக மக்களை ஆயுதம் எந்த வைக்கும் அரசே பொறுப்பாகும். ஏனெனில் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பதில்லை மாறாக அரசின் அடக்குமுறையே தீர்மானிக்கிறது.
இரண்டாவதாக இன்று ஆயுதம் எந்தவதை பயங்கரவாதம் என்று கூறும் அமெரிக்கா போன்ற நாடுகள் எல்லாம் ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்தியே விடுதலை பெற்றன. வன்முறை இன்றி விடுதலை பெற்ற ஒரு இனத்தை உலகில் யாராலும் காட்ட முடியுமா?
எனவே இறுதியாகவும் உறுதியாகவும் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் எமக்கு தேவை மாற்று முகம் அல்ல, மாற்று தலைமையே!