அண்டார்டிகா பிரதேசத்தில் உள்ள வெட்டல் கடலில் மிதந்துவரும் செவ்வக வடிவ மாபெரும் பனிப்பாறை ஒன்றின் புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.
ஆய்வுக்காக அனுப்பப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.
அந்தப் பனிப்பாறையின் கூர்மையான கோணங்களும், தட்டையான மேற்பரப்பும் அந்தப் பனிப்பாறை சமீபத்தில்தான் துண்டாகி வந்துள்ளதைக் குறிக்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அண்டார்டிகாவில் லார்சன்-சி பனி அடுக்கில் இருந்து பிரிந்து வந்துள்ள அந்தப் பாறையின் முனைகள் கடல் அலைகளால் மழுங்கடிக்கப்படாமல் இன்னும் கூர்மையாவே இருக்கின்றன.
“விரல் நகங்கள் நீளமாக வளர்ந்தால், முனையில் இருக்கும் நகத்தின் பகுதி ஒடிந்து விழுவதை போலவே இந்தப் பனிப்பாறைகளும் துண்டாகி விழுகின்றன,” என்கிறார் நாசா மற்றும் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பனிப்பாறைகள் குறித்து ஆராயும் கெல்லி ப்ரண்ட்.
பெரும்பாலும் அவ்வாறு விழும் பனிப்பாறைகள் முறையான வடிவங்களை பெற்றிருக்கும் என்கிறார் அவர்.
ஆனால் இந்தப் பனிப்பாறை மற்ற பனிப்பாறையில் இருந்து மாறுபாடக் காரணம் இது சதுர வடிவத்தில் இருப்பதே என்கிறார் கெல்லி.
புகைப்படத்தை வைத்து இதன் சரியான அளவை உறுதிசெய்ய இயலவில்லை என்றாலும், இதன் அகலம் சுமார் 1.6 கிலோ மீட்டர் தூரம் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.