உக்ரேனிலிருந்து ஆயுதங்களை ஏற்றியபடி அவ்ரோ விமானமொன்று இரணைமடுவில் தரையிறங்கப் போகிறதென்ற தகவலை புலிகள் மிக இரகசியமாக வைத்திருந்தனர். மிக உயர்மட்ட தளபதிகள் சிலருக்கும், வான் புலிகளின் ஒரு தொகுதி போராளிகளிற்குமே விடயம் தெரிந்திருந்தது. விமானத்தில் கொண்டுவரப்படும் ஆயுதங்களை உடனடியாக இறக்கி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லவே வான் புலிகளின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் கொண்டுவரப்பட்டிருந்தனர்.
இந்த சமயத்தில்தான் மன்னார் ராடர் நிலையத்தில் இருந்து அரசாங்கத்தின் விமான தாக்குதலிற்கான எச்சரிக்கை பகிரப்பட்டது. இரணைமடு விமான ஓடுபாதைக்கு அண்மையில் காத்திருந்த தளபதிகளிற்கு குழப்பம் ஏற்பட்டு விட்டது. உக்ரேனிலிருந்து வரும் அவ்ரோ விமானம் முல்லைத்தீவு கடலிற்கு மேலான வானில் பிரவேசித்து, வன்னிக்குள் நுழையுமென்பதே திட்டமாக இருந்தது. இந்த திட்டம் கடற்புலிகளின் ராடர் அணிக்கு தெரிந்திருக்கவில்லை. இரணைமடுவுக்கு அண்மையாக- பனிச்சங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த வான் புலிகளின் ராடர் அணிதான் விமானத்தின் வரவை கண்காணித்தது.
கடற்புலிகளின் எச்சரிக்கையால் தளபதிகள் தடுமாறிக்கொண்டிருந்த சமயத்தில் வான் புலிகளின் ராடர் மையத்தில் இருந்து ஒரு எச்சரிக்கை வந்தது. ஆயுத விமானம் வரும் திசையிலிருந்து விமானம் வரவில்லை, கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வரும் தாக்குதல் விமானங்களின் பறப்பு பாதையிலிருந்து விமானமொன்று வந்து கொண்டிருக்கிறது, அனேகமாக அது விமானப்படையின் தாக்குதல் விமானமாக இருக்கலாம் என்ற எச்சரிக்கையையடுத்து இரணைமடு ஓடுபாதைக்கு அண்மையில் காத்திருந்த புலிகள் பாதுகாப்பான இடங்களிற்கு நகர்ந்துவிட்டனர்.
அடுத்த ஓரிரண்டு நிமிடங்களில் இரணைமடு வான் பரப்பில் இலங்கை விமானப்படையின் இரண்டு தாக்குதல் விமானங்கள் வட்டமிட்டு, ஓடுபாதைக்கு அண்மையாக பரவலாக குண்டுகளை வீசின. வழக்கமாக வான்புலிகளின் விமான ஓடுதளத்தை சீர்குலைக்கும் தாக்குதலை நடத்தும் போது, பதுக்குகுழிகளை பெயர்க்கும் குண்டுகளைதான் விமானப்படையினர் வீசுவர். தமிழ்செல்வனின் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலும் இந்தவகையான குண்டுகள்தான் வீசப்பட்டன. ஆனால், பரவலான மனித இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் போது air shot என அழைக்கப்படும் வானிலேயே வெடித்து சிதறும் குண்டுகளைதான் வீசுவார்கள். அன்று இரணைமடுவில் வீசப்பட்டது அந்த வகையான குண்டுகள்தான்.
இந்த தாக்குதல் முடிந்ததும் வழக்கம் போல இலங்கை அரசு அறிவித்தது- விடுதலைப்புலிகளின் விமான ஓடுதளம் மீது விமானப்படையினர் வெற்றிகரமான தாக்குதல் நடத்தி நிர்மூலமாக்கியுள்ளனர் என. புலிகள் அறிவித்தனர்- கிளிநொச்சியில் மக்கள் குடியிருப்புக்களிற்கு அண்மையாக இலங்கை விமானப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என. உண்மையான விடயம் என்னவென இரண்டு தரப்பும் மூச்சும் விடவில்லை.
தாக்குதலின் பின்னர்தான் புலிகள் என்ன நடந்ததென ஊகிக்க முயன்றனர். ஆயுதங்களை தரையிறக்கும் திட்டத்தை வெளிநாட்டில் இருந்து செயற்படுத்தியவர்களை தொடர்புகொண்டு, அவ்ரோ தரையிறங்காத விடயத்தை அறிவித்தனர். உடனடியாக நிலவரத்தை அறிவிக்குமாறு வன்னியிலிருந்து கட்டளை பறந்தது.
ஆயுத வியாபாரியான உக்ரேனியனை அவர்கள் தொலைபேசியில் பிடித்து விடயத்தை கேட்க, அவன் இப்பொழுதுதான் நித்திரையால் எழும்பியவனை போல கதைத்தான். திட்டம் பக்காவானது, ஒரு குழப்பமும் நடந்திருக்காதென அடித்து சத்தியம் செய்தான். வெளிநாட்டிலிருந்து கதைத்த புலிகளின் தொடர்பாளர்களிற்குதான் குழப்பமாகிவிட்டது. நம்மவர்கள்தான் ஏதோ மாறி கதைத்து விட்டார்களோ என அவர்கள் குழம்பும் விதமான உக்ரேனியன் கதைத்தான். வன்னியுடன் தொடர்பேற்படுத்தி, விமானம் வரவில்லையென்பதை திரும்பவும் உறுதிசெய்த பின்னர், உக்ரேனியனுடன் தொடர்பை ஏற்படுத்தி விடயத்தை சொன்னார்கள். என்ன பிரச்சனையென பார்த்துவிட்டு திருப்பி அழைப்பதாக சொன்ன உக்ரேனியன் பின்னர் அழைப்பை ஏற்கவில்லை. நீண்டநேரமாக முயற்சிசெய்து, வேறுமார்க்கமொன்றில் மீண்டும் அவனை பிடித்தார்கள் தொடர்பாளர்கள்.
இரணைமடுவில் இறங்க வேண்டிய விமானத்தை விமானி தவறுதலாக இந்தியாவில் இறக்கிவிட்டார். அங்கு பிரச்சனையாகி விட்டது. விமான நிலைய அதிகாரிகளிற்கு கொஞ்சம் பணம் கொடுத்து வெளியில் எடுக்கும் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவசரப்படாமல் பொறுமையாக இருங்கள் என்று உக்ரேனியன் சொன்னான். புலிகள் பொறுமையாக இருந்தார்கள். இதன்பின் உக்ரேனியன் புலிகளின் தொடர்பு எல்லைக்குள் வரவேயில்லை.
உக்ரேனியன் அனுப்பியதாக சொன்ன அவ்ரோ வரவில்லை. அவ்ரோவிற்காக காத்திருந்த புலிகள் மீது இலங்கை விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றன. அப்படியானால் என்ன நடந்தது?
விடுதலைப்புலிகளின் ஆயுத விநியோக மற்றும் சர்வதேச வலையமைப்பிற்குள் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் எப்படி ஊடுருவி அதை சீர்குலைத்தன, இதன்மூலம் புலிகளின் முதுகெலும்பை எப்படி உடைத்தார்கள் என்பதை இந்த பகுதியில் தொடர்ந்து குறிப்பிடுவோம்.
இந்த பகுதியில் புலிகளின் ஆயுத விநியோக வலையமைப்பை பற்றி குறிப்பிட ஆரம்பித்த சமயத்தில் சற்று திசைமாறி, ஆயுத விநியோக உலகத்தில் உள்ள எமகாதகர்களை பற்றி இரண்டு சம்பவங்களை குறிப்பிடுகிறோம் என கூறி, சற்று திசைமாற்றினோம். அதில் ஒன்றுதான், ஏற்கனவே குறிப்பிட்ட உக்ரேனியனின் அவ்ரோ விமான சம்பவம்.
இன்னொரு சம்பவமும் உள்ளது. இதில் சம்பந்தப்பட்டவரை எல்லோருக்கும் நன்றாக தெரியும். இன்னும் சொல்லப்போனால் ஈழத்தமிழர்கள் தமது உரிமைப்போராட்டத்திற்கு நம்பிக்கையான தோழமையாக கருதிய ஒருவரை பற்றிய தகவல் இது.
2000 ஆம் ஆண்டுகளின் முன்னர் பெரும்பாலான ஈழத்தமிழர்களிற்கு நம்பிக்கையான செய்தி ஊடகங்களில் ஒன்றாக இருந்தது பிலிப்பைன்சில் இருந்து இயங்கிய கத்தோலிக்க வானொலியாக வெரித்தாஸ் தமிழ்பணி. அதன் இயக்குனராக இருந்தவர் பாதிரியார் ஜெகத் கஸ்பார். இவருக்கு தமிழர் போராட்டத்துடன் நெருக்கமான தொடர்புள்ளது, புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் ஊடாக தகவல்களை முன்கூட்டியே பெற்றுக்கொள்கிறார், இவர் ஒரு பாதிரியார் என்பதே பெரும்பாலானவர்கள் அறிந்து வைத்திருந்த தகவல்.
ஜெகத் கஸ்பார் இப்படியானவர் மட்டுமல்ல. அவர் இன்னும் பல மடங்கு ஆழமானவர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சந்திராசாமி என்பவர் மீது குற்றம்சாட்டி, அவரை விசாரணை செய்ய வேண்டுமென்பவர்கள் இன்றுமுள்ளனர். இந்த சந்திராசாமி யாரெனில்- வெறும் சாமியார் அல்ல. வெளிநாட்டு உளவு அமைப்புக்கள், ஆயுத விற்பனை நிறுவனங்கள், ஏஜெண்ட்களுடன் தொடர்பில் இருந்தவர். அவர்களுடன் வியாபார உறவை வைத்திருந்தவர். சந்திராசாமியின் தோற்றத்தை வைத்து, நமது உள்ளூர் சாமியார்கள் போல கோயிலும் குளமுமாக திரிவார் என நினைத்தீர்கள் எனில், நீங்கள் ஏமாந்து விடுவீர்கள். ஜெகத் கஸ்பாரும் இப்படியான ஒருவர்தான்.
கஸ்பார் தமிழகத்தை சேர்ந்தவர். அவருக்கு நிறைய ஆயுத விற்பனையார்கள், நிறுவனங்களுடன் தொடர்பிருந்தது. இந்தியாவின் அரசியல் முக்கியஸ்தர்களுடனும் தொடர்பை பேணினார். யுத்தத்தின் இறுதியில் புலிகளின் தலைவர்கள் சரணடையும் முயற்சி செய்தபோது அதில் கஸ்பாரும் இணைந்திருந்தார். புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் நடத்திய பேச்சில் கஸ்பாரின் பங்களிப்பும் இருந்தது. கனிமொழியும் கஸ்பாரும் நெருக்கமான நண்பர்கள். 2 ஜி அலைக்கற்றை ஊழல் விசாரணையில் கனிமொழி சிக்கியபோது, கஸ்பாரும் நெருக்கடியை சந்தித்தார். கஸ்பாரின் அலுவலகத்தையும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்த கஸ்பார் ஒரு சமயத்தில் புலிகளின் ஆயுத விற்பனை வலையமைப்பில் இணைந்திருந்ததுடன், பண விவகாரத்தில் நம்பிக்கையற்றவர் என அதிலிருந்து விலக்கப்பட்டவர்.
அது என்ன டீல், அப்போது என்ன நடந்ததென்பதை அடுத்த பாகத்தில் குறிப்பிடுகிறோம்.