‘விஸ்வாசம்’ படத்தின் 2-வது லுக் போஸ்டரில், புதிதாக ஒரு லோகோ இணைக்கப்பட்டுள்ளது.
அஜித் நடிப்பில், சிவா இயக்கியுள்ள ‘விஸ்வாசம்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் ராஜமுந்திரியில் நடைபெற்றது.
இந்தப் படத்தில், தெலுங்கு வில்லன் நடிகரான ரவி அவானா வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அஜித் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இன்று (அக்டோபர் 25) 2-வது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதிலும், பொங்கல் வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு. அத்துடன், இன்னொரு லோகோவும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரபல இசை நிறுவனமான ‘லகரி மியூஸிக்’ நிறுவனத்தின் லோகோ தான் அது. ஏற்கெனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்த லோகோ இடம்பெறவில்லை. எனவே, ‘விஸ்வாசம்’ படத்தின் இசை உரிமையை லகரி மியூஸிக் கைப்பற்றியிருப்பது தெரியவந்துள்ளது.
லகரி மியூஸிக், முதன்முறையாக அஜித் படத்தின் இசை உரிமையைக் கைப்பற்றியிருக்கிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் வெளியான ‘தொடரி’ படத்தின் இசையை இந்த நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.