டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணா, சட்டப்பேரவை தலைவர் தனபாலின் உத்தரவு செல்லும் என்று இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பளித்துள்ளார்.
குறிப்பிட்ட 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த இருந்த தடையும் இந்தத் தீர்ப்பில் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகிய இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய சூழலில், மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணாவுக்கு இந்த வழக்கு அனுப்பப்பட்டது.
ஜூன் மாதத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகரின் உத்தரவு செல்லுமென அறிவித்தார். அதே அமர்வின் சக நீதிபதியாக இருந்த சுந்தர், சபாநாயகரின் தீர்ப்பு செல்லாது என அறிவித்தார்.
முன்பு இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், தன் முன்பு வைக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தாமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாக நீதிபதி சத்யநாராயணா கூறியுள்ளார்.
சட்டமன்ற சபாநாயகருக்கான அதிகாரங்கள் என்ன என்பதை வரையறை செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், 18 சட்டமன்ற உறுப்பினர்களையும் நீக்கி சபாநாயகர் உத்தரவிட்டதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதி சத்யநாராயணா குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த டி.டி.வி. தினகரன், “20 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதே என் தனிப்பட்ட விருப்பம். ஆனால், 18 எம்.எல்.ஏக்களை சந்தித்துவிட்டு தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்து முடிவெடுக்கப்படும். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு அல்ல. இது எங்களுக்கு ஒரு பாடம் அவ்வளவுதான். ” என்று தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பு கட்சியின் துரோகிகளுக்கு புகட்டப்பட்டுள்ள பாடம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருப்பது குறித்து பேசியுள்ள தினகரன் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போதே துரோகிகள் யார் என்று மக்கள் அடையாளம் காட்டிவிட்டனர் என்று கூறியுள்ளார்.
வழக்கின் பின்னணி என்ன?
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அப்போதைய பொறுப்பு ஆளுநர் சி. வித்யாசாகர் ராவைச் சந்தித்த டி.டி.வி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் முதலமைச்சருக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த 19 பேரிடமும் விளக்கம் கேட்டு அ.தி.மு.கவின் கொறடா ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பினார். இவர்களது செயல், தானாக முன்வந்து அ.தி.மு.கவின் உறுப்பினர் தகுதியிலிருந்து வெளியேறுவதற்குச் சமம் என்பதால் இந்த 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜேந்திரன் சபாநாயகரிடம் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று கோரினார்.
இவர்களில் எஸ்.டி.கே. ஜக்கையன் பிறகு ஆளும் பிரிவுக்கு ஆதரவாளராகி விட்டார். செப்டம்பர் 17ஆம் தேதியன்று சபாநாயகரைச் சந்தித்த அவர், டிடிவி தினகரன் தரப்பினர் தன்னை வற்புறுத்தி ஆளுனரை சந்திக்க அழைத்துச் சென்றுவிட்டதாக தெரிவித்தார்.
இதற்குப் பிறகு, மீதமுள்ள 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் செப்டம்பர் 18ஆம் தேதியன்று அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் 1986ஆம் ஆண்டு விதிகளின்படியும் கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்படியும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையை அடுத்து, தமிழக சட்டமன்ற உறுப்பினர்களில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவந்த தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), ஆர். முருகன் (அரூர்), எஸ். மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), கே. கதிர்காமு (பெரியகுளம்), சி. ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்), பி. பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி), வி. செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), எஸ். முத்தைய்யா(பரமக்குடி), பி. வெற்றிவேல் (பெரம்பூர்), என்.ஜி. பார்த்திபன் (சோளிங்கர்), எம். கோதண்டபாணி (திருப்போரூர்), டி.ஏ. ஏழுமலை (பூந்தமல்லி), எம். ரங்கசாமி (தஞ்சாவூர்), ஆர். தங்கதுரை (நிலக்கோட்டை), ஆர். பாலசுப்பிரமணி (ஆம்பூர்), எதிர்கோட்டை எஸ்.ஜி. சுப்பிரமணியன் (சாத்தூர்), ஆர். சுந்தர்ராஜ் (ஓட்டப்பிரடாரம்), உமா மகேஸ்வரி (விளாத்திகுளம்) ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தத் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி எம். துரைசாமி, மறு உத்தரவு வரும் வரை இந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என செப்டம்பர் 20ஆம் தேதியன்று இடைக்காலத் தடைவிதித்தார்.
இதற்குப் பிறகு இந்த வழக்கு நீதிபதி கே. ரவிச்சந்திரபாபுவுக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு, இந்த வழக்குகளில் அரசியல் சாஸனம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் இருப்பதால் வழக்கு டிவிஷன் அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு வழக்கு சுமார் மூன்று மாதங்கள் விசாரிக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதியன்று வழக்கின் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
தற்போதைய அவை பலம் என்ன?
234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் போஸ் ஆகியோர் மரணமடைந்ததால் தற்போது மொத்தம் 232 இடங்கள் உள்ளன.
இதில் தி.மு.க. 88 உறுப்பினர்களையும் காங்கிரஸ் எட்டு உறுப்பினர்களையும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஒரு உறுப்பினரையும் பெற்றுள்ளன. டி.டி.வி தினகரன் சுயேச்சையாக வெற்றி பெற்றிருக்கிறார். 18 உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
ஆளும் எடப்பாடி கே. பழனிசாமி பிரிவுக்கு 116 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது.
‘கவலை இல்லை’
இந்தத் தீர்ப்பு குறித்து தங்களுக்கு எவ்விதமான கவலையும் இல்லை என்றும் ஏற்கனவே காலியாக உள்ள இரு தொகுதிகளும் சேர்த்து, 20 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த தீர்ப்புக்கு பிறகு சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இறை அருளால் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளதாகவும், இடைத் தேர்தல் வந்தால் எப்போது வேண்டுமானாலும் அதைச் சந்திக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்தால்தான் மேற்கொண்டு தங்கள் தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.