வட-கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் நடத்தி வந்த பண்ணைகளை மக்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னெடுப்பதற்கு எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படவுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் பண்ணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்களிடம் அவற்றைக் கையளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பல தடவைகள் வலியுறுத்தப்பட்டன. வடகிழக்கு அபிவிருத்திக்கான அரச தலைவர் சிறப்புச் செயலணிக் கூட்டத்திலும் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
தாம் நடத்தும் பண்ணைகளை மக்களிடம் கையளிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு குழு நியமிக்கப்பட்டிருந்ததாக, இராணுவப் பேச்சாளர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு நிலையிலேயே அவற்றை மக்களிடம் கையளிக்க இராணுவம் முடிவு செய்துள்ளது.
இந்தப் பண்ணைகளை விவசாயத் திணைக்களத்திடமா அல்லது யாரிடம் கையளிப்பது என்று இராணுவத்தினர் கோரியிருந்தனர். விவசாயத் திணைக்களத்திடம் கையளிப்பதை விட, கூட்டுறவு அமைப்புக்கள் ஊடாக மக்களிடம் நேரடியடியாகக் கையளிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பண்ணைகளை, இராணுவத்தினரிடமிருந்து கூட்டுறவு அமைப்புக்களுக்கு மாற்றுவதற்குரிய நிதியை, அடுத்த மாதம் சமர்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்குவதற்கு நிதி அமைச்சு இணங்கியுள்ளது.