மழையில் தோன்றும் காலானாய்
மங்கையர் உரிமை கோரி
மட்டற்ற இயக்கங்களும், போராட்டங்களும்
மேற்கின் கிளைகளாய் உலகில்
மண் மீது இன்று பல விதமாய்…
சுதந்திரமும், சமத்துவமும்
வேண்டுமென தமக்கும்
உரிமைக்குரல் எழுப்பி
பாதையிலும் பத்திரிகையிலும்
போராட்டங்களை தொடர்கின்றனர்…
பெண்ணவள் வெறும்
காட்சிப் பொருளாய்
கவர்ச்சி பண்டமாய்
எதிர்பாலிற்கு அடிமையாய்
ஆசைக்கு வடிகாலாய்
பலர் கருதும்
நவீன ஜாஹிலிய்யத்தில்
உரிமைப் போராட்டங்கள்
தொடர்வதும் தவிர்க்க இயலாதே…
இதற்கெல்லாம் தீர்வே
இல்லையோ என்று
இன்னலுறும் அனைவருக்கும்
இல்லத்து தலைவிகளாம்
இனிய பெண்களிற்கு
இஸ்லாம் கொடுத்த
கண்ணியமும், சமத்துவமும்
சரியாய் புரிந்து
நடைமுறைக்கு வந்தால்
இது போன்ற தவிப்புகளும்
இனியும் இருக்காது…
இதனை புரியா
மேற்கில் பலர்
ஹிஜாபும், வரையரைகளும்
பெண்ணின் பாதுகாப்புக்கே
என்பதை மறுத்து
பெண்ணின் சுதந்திரத்திற்கு
வேலியே இதுவென
விமர்சித்து திரிகின்றனர்…
கொடுக்கவில்லை ஒருமதமும்
என் மதம் அளவு
சுதந்திரம் எமக்கு,
தரவில்லை ஒருமதமும்
என் மதம் அளவு
கண்ணியம் எமக்கு,
இறை நம்பிக்கையாளர்களிற்கு முன்மாதிரியாய்
குர்ஆன் கூறும் இருவரும்
பிர்அவ்னின் மனைவியும்,
மர்யம் ( அலை) யுமென
இரு பெண்களே என்பதிலுமா
புரியாது எமக்கு
இஸ்லாம் கொடுத்துள்ள சமத்துவம்…
கண்ணியமான குர்ஆனில்
மங்கையர் பெயரில்
நிஸா எனும்
தனி அத்தியாயம்
பெண்ணின் முக்கியத்துவத்திற்கு
இஸ்லாத்தில் கொடுத்த
மாண்பில் ஒரு துளியே…
இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு
உயிரையே முதலில்
அர்பணித்து அடித்தளமிட்டவர்
வீர மங்கை,
சுமைய்யா நாயகியே…
உஹதிலும், பத்ரிலும்
மற்ற அனைத்து போர்களிலும்
ஆண்களிற்கு தாங்கள்
சளைத்தவர்கள் அல்ல
என்பதை வீரமுடன்
நிறுவினர் எம்
வீரப் பெண்மணிகள்…
இஸ்லாத்தின் முதல் வஹி
ஹிராவில் வந்தவுடன்
அச்சத்தில் உடல் குளிர
வேகமாய் வீட்டுக்கு வந்த
அண்ணலார் பெருமானை
தைரியமும், ஆறுதலும்
அளித்து தட்டிக் கொடுத்து
மாரக்கத்தையும் முதலில்
ஏற்றி இஸ்லாத்திற்காய்
உறுதியாய் அத்திவாரமிட்டார்…
அடுப்பூதும் பெண்களிற்கு
படிப்பு எதற்கென
விமர்சிக்கின்றனர் இன்று..
கல்வித் துறையில்
ஆயிஷாவும் அஸ்மாவும்
ஆண்களிற்கும் வரலாற்றில்
ஆசிரியர்களாய் இருந்து
கல்வியினை புகட்டியுள்ளனர் அன்று…
பெண்களை கண்ணாடி
போன்றவர்கள் எனக் கூறும்
எம் மதம் இஸ்லாம்
தாய் பிள்ளைகளிற்கு
சுவனத்தை பெற்று தருவார்
மகள் தந்தைக்கு
சுவனத்தை பெற்று தருவார்
என்ற நற்செய்தியை தந்து
பெண்களை போற்றியுள்ளனர்…
மகளாய், மனைவியாய்
தாயாய், மாமியாய்
பெண்ணின் வகிபங்கு
எண்ணற்றது என்பதனை
சரியாய் புரிந்த
இஸ்லாம் கூறுமளவு
தாய்மையின் மேன்மையை
எம்மதமும் கூறிட
தவறியுள்ளனர் எனலாம்…
இஸ்லாத்தில் பெண்ணியத்திற்கு
கொடுக்கும் உரிமையை,
சமத்துவத்தை , கண்ணியத்தை
புரிந்து கொண்டாலே
இஸ்லாம் மீதான
தவறான புரிந்துணர்வு
விலகி ஓடிவிடும்…
வெறும் எழுத்தில்
மட்டுமின்றி நடைமுறைப்படுத்தினாலோ
உருவாக தேவையில்லை
பெண்ணுரிமை கோஷங்கள்….