யாழ்.அச்சுவேலி மேற்கு கைத்தொழில் பேட்டை ஊழியர்கள், பொதுமக்கள் சேர்ந்து தமக்கான அடிப்படை வசதி கோரி கடும் மழைக்கு மத்தியிலும் மாபெரும் ஊர்வல கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் இன்று முற்பகல் 10 மணிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தண்ணீர், மின்சாரம், வீதி புனரமைப்பு போன்ற அடிப்படை வசதிகளை வழங்குமாறு கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த ஊர்வலப் போராட்டம் அச்சுவேலி சங்கானை வீதியில் இருந்து தொடங்கி இராச வீதி, கைத்தொழில் பேட்டை வீதியுடன் நிறைவுபெற்றுள்ளது.
அச்சுவேலியில் கைத்தொழில் பேட்டையில் ஐந்து கைத்தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இரண்டு தொழிற்சாலைகள் கட்டப்பட்டு வரும் நிலையில் இந்த தொழிற்பேட்டைக்கு செல்லும் வீதி 50 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பின்றி காணப்படுகிறது.
மேலும் அந்தப் பிரதேசம் தண்ணீர், மின்சார வசதியின்றி காணப்படுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அடிப்படை வசதிகோரி சம்பந்தப்பட்ட தரப்பிடம் கோரிக்கை விடுத்தும் எதுவித பதிலும் வராத நிலையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கைத்தொழில் பேட்டை இயங்கும் பட்சத்தில் அதற்கான தண்ணீர், மின்சார ,வீதிபுனரமைப்புகளை செய்து தருவதாக ஒப்பந்தத்திலே குறிப்பிடப்பட்டும் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.