இவரா… அவரா… அல்லது, எதிர்பார்க்காத வேறு யாருமா? வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர்கள் யார்?
கூட்டமைப்பு தனித்தா, பிரிந்தா போட்டியிடும்? முதலமைச்சரின் கட்சியின் சின்னம் எது? டக்ளஸ் தேவானந்தா போட்டியிடுவாரா? விடுதலைப் புலிகளை பற்றி பேசி திடீர் போராளியான விஜயகலாவும் போட்டிக்களத்தில் களமிறங்குவாரா?
இப்படியாக ஒரு மாகாணசபை தேர்தலை வைத்துக் கொண்டு, தமிழர்கள் ஆயிரம் கேள்விகளோடு திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்கள். நான்கைந்து கேள்விகள் என்றால் சமாளிக்கலாம், ஆயிரம் கேள்விகளென்றால் எப்படி சமாளிப்பது? தமிழர்கள் தலையை பிய்த்துக் கொள்ள இதுதான் காரணம்.
இந்த குழப்பங்கள் போதாதென- சமூக வலைத்தளங்களிற்குள் நுழைந்தால், அடுத்த பிரபாகரன், அடுத்த தேசியத் தலைவர், அடுத்த பெண் போராளியென ஆயிரம் பேரின் விழுதுகள் அணிவகுத்து நிற்பார்கள். அதற்குள் எது ஒரிஜினல், எது பேக் ஐடியென்று கண்டுபிடிப்பதற்குள் நமக்கு கண்ணெல்லாம் வியர்க்க தொடங்கிவிடும்.
சரி, சமூக வலைத்தள ஏரியாவில்தான் கண்ணை வியர்க்க வைக்கிறார்கள் என்றால், நமது பத்திரிகைகளை திறந்தால் மூக்கை வியர்க்க வைக்கும்விதமான செய்திகள்தான் வருகிறது. ஒரு மனிதன் இப்படி எத்தனை பிரச்சனையைத்தான் சமாளிப்பது?
இதற்காகத்தான்- மாகாணசபை தேர்தல் குழப்பங்களை தீர்ப்பதற்காக இந்த பகுதியை ஆரம்பித்துள்ளோம். இதை படித்தால் கண், மூக்கு வியர்க்காமல் தேர்தல் களத்தை புரிந்துகொள்ளலாம். கட்சிகளின் வேட்பாளர் இழுபறிக்கு பின்னால் நீங்களும் இழுபட்டு செல்லாமல், முன்னரே விடயங்களை ஊகித்துக் கொள்ள முடியும்.
சரி, இந்த வாரம் ஐக்கிய தேசியக்கட்சி முகாமிற்குள் நுழைந்து பார்க்கலாம். இன்றைய திகதியில் அதிகம் பேசப்படுபவர் விஜயகலா எம்.பி. அதுவும், பிரபாகரனை பற்றி பேசி பிரபலமாகி விட்டார். அவரை போராளியாக்கி யாழ்ப்பாணத்தில் போஸ்டர்களும் ஒட்டிவிட்டார்கள். இந்த போஸ்டர்களையெல்லாம் தயார் செய்துவிட்டுத்தான் அவர் பேசினாரோ என்று சந்தேகப்படும் விதத்தில், அவ்வளவு விரைவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
விடுதலைப்புலிகளைப் பற்றி பேசியதால் தெற்கில் எழுந்துள்ள எதிர்ப்பலையால் விஜயகலா வடக்கு முதலமைச்சர் கதிரையை குறிவைத்து காய்களை நகர்த்தலாமென்ற ஊகங்களை கிளப்பியுள்ளது. இதெல்லாம் உண்மையா?
முதலாவது, விஜயகலா பேசிய விடயம் திட்டமிட்ட விடயமாக இருக்க வாய்ப்பில்லை. அண்மைக் காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் விஜயகலா மட்டுமல்ல, சுதந்திரக்கட்சியின் அங்கஜனும் அதிகம் விடுதலைப்புலிகளை பற்றி பேசுகிறார். விடுதலைப்புலிகளை பற்றி பேசியே அரசியல் செய்யலாமென்ற நிலைமையை இரண்டு கட்சிகளும் வடக்கில் ஏற்படுத்தி வருகிறார்கள். அதற்கு காரணமும் உள்ளது.
இரண்டு கட்சிகளுமே தமிழ் இளைஞர்களை குறிவைத்து- வேலைவாய்ப்பு என்ற சலுகையை வீசி அரசியல் செய்கிறார்கள். கடந்த மூன்றாண்டுகளில் தான் இந்த கட்சிகளிற்கு தமிழ் பகுதிகளில் திடீர் வீக்கம் தென்படுகிறது. அதற்கு காரணம்- இனப்பிரச்சனை தீர்வு முயற்சிகளிற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் நெருக்கமாக செயற்படுவது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசின் நெருக்கமான கட்சியென உள்ளூரில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்ப்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் செய்கிறார்கள். கூட்டமைப்பின் இணக்கமான போக்கும் தீவிர எதிர்ப்பரசியலின் முனையை மழுங்க செய்துள்ளது.
பொதுவாகவே தமிழர்களின் இயல்புகளில் ஒன்று- அரச வேலையும் வேண்டும், தமிழீழமும் வேண்டும் என்ற மனநிலையே. அதாவது, பெரும்பாலானவர்கள் எல்லாவிதமான வசதிகளுடனும் வாழ்க்கையை அமைப்பதையே விரும்புவார்கள். அதேசமயம், யாராவது தமிழீழத்தை பெற்றுத்தந்தால் மகிழ்ச்சியடைவார்கள். இது தான் தமிழ் மனநிலை.
தென்னிலங்கை கட்சிகள் வேலைவாய்ப்பு என்ற சலுகையை வீச, இன்று பெருமளவான இளைஞர்கள் அந்த கட்சிகளின் வாக்காளர்களாக மாறியிருக்கிறார்கள். இந்த கட்சிகளை ஆதரிப்பவர்களிடம் அரசியல்ரீதியிலான விழிப்புணர்வெதுவும் கிடையாது. வேலை… வேலை… வேலை- அதை தவிர்த்தால், விளையாட்டு கழகத்திற்கும், கோயிலுக்கும் நிதி கிடைத்தது என்பார்கள்.
இந்தவகையானவர்களை தொடர்ந்தும் கட்சிகளின் ஆதரவாளர்களாக வைத்திருக்கவே தென்னிலங்கை கட்சிகள் புலி வாலை பிடித்துள்ளன. வேலைவாய்ப்பையும் கொடுத்து… அவர்களின் மனதை கிளர்ச்சியடைய வைக்க புலிகளை பற்றியும் பேசி, கச்சிதமாக அரசியல் செய்கிறார்கள். பொதுவான தமிழ் மனநிலையை நன்றாக நாடி பிடித்து வைத்துள்ளதாலேயே சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சிகளின் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை போல தம்மை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விஜயகலா அன்று வீரசிங்கம் மண்டபத்தில் புதிதாக ஒன்றையும் பேசவில்லை. வழக்கமாக எதை பேசி வந்தாரோ, அதைத்தான் பேசினார். என்ன… சில வார்த்தைகளை கூடுதலாக பேசி விட்டார். அவ்வளவுதான்.
வடக்கு மாகாணசபை தேர்தலை குறிவைத்து அவர் அப்படி பேசியிருக்கவில்லை. அடுத்த நாடாளுமன்றத்தை குறிவைத்து அவர் பேசி வருவதன் தொடர்ச்சிதான் அந்த பேச்சு. அந்த பேச்சின் பின்னர் ஏற்பட்ட சூழலையும் பயன்படுத்திக் கொள்ளலாமென்பதற்காகவே அந்த அவசர போஸ்டர்கள்.
ஐக்கிய தேசியக்கட்சியின் வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக விஜயகலா போட்டியிட வாய்ப்பில்லை. அப்படியொரு முயற்சி செய்வது அரசியல் தற்கொலையிலேயே முடியுமென்பது விஜயகலாவிற்கு தெரியும்.
முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதில் ஒன்றுமே கிடையாது. முதலமைச்சர் ஆகினால்தான் அரசியல் பலனை அறுவடை செய்யலாம். கடந்த மாகாணசபை தேர்தலில் யாழில் ஒரு பிரதிநிதிகளையும் ஐ.தே.க பெற்றிருக்கவில்லை. இந்த இலட்சணத்தில் இம்முறை முதலமைச்சர் கதிரையை குறிவைத்து, தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை விஜயகலா துறக்க முடிவெடுக்க மாட்டார். ஏனெனில் அடுத்த மாகாணசபை தேர்தலில் ஐ.தே.க வின் வாக்கு வங்கியில் அதிரடியான மாற்றங்கள் நிகழாது.
கடந்த உள்ளூராட்சி தேர்தலில் வடக்கில் சுதந்திரக்கட்சியைவிட, ஐ.தே.கவின் வாக்கு வங்கி அதிகரித்திருந்தது. யாழ் மாவட்டத்திலும் இதுதான் நிலைமை. இன்றைய அனுதாபத்தால் சடுதியான வாக்கு மாற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை. இப்போதைய நிலையில் யாழில் ஐ.தே.கவிற்கு ஒரு ஆசனத்திற்கு பெரும்பாலான வாய்ப்புண்டு. அப்பொழுது பெறும் வாக்குகள் விகிதாசார ஆசனமொன்றையும் தீர்மானிக்கம். வடமாகாணசபையிலேயே நேரடியாக ஐதேக பிரதிநிதிகள் யாரும் கிடையாது. ரிசாட் பதியுதீன் மூன்று ஆசனங்களையும், ஹக்கீம் ஒரு ஆசனத்தையும் வைத்திருக்கிறார்கள். ஐ.தேக கூட்டிற்கு ஆக நான்கு ஆசனங்கள்தான். அடுத்த தேர்தலில் இவர்கள் எந்த கூட்டணியில் இருப்பார்கள் என்பதும் தெரியாது. எப்படி பார்த்தாலும், ஐந்திற்குபட்பட்டளவான ஆசனங்களையே ஐ.தே.கவும் கூட்டணிகளும் வெல்ல வாய்ப்புள்ளது. இதற்கும் அதிக பட்சமாக ஐ.தே.க எதிர்பார்க்க முடியாது.
ஆனால் ஐ.தே.கவின் பிரதான பலவீனமொன்றை கணக்கிடாமலேயே மேலுள்ள அனுமானத்தை வெளியிட்டிருந்தோம். ஐ.தே.கவின் யாழ் கிளையில் எத்தனை அணிகள் உள்ளன என்பதை ரணில் விக்கிரமசிங்கவே எண்ணி முடித்திருப்பாரா தெரியாது. அவ்வளவு குழுக்கள் உள்ளன. ஒவ்வொருவரும் கட்சியின் யாராவது ஒரு பிரமுகரை பிடித்து, ஏதாவதொரு பொறுப்பை எடுத்து விடுகிறார்கள். பின்னர் ஒரு குழுவை உருவாக்கி செயற்படுகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் ஒருவரின் அலுவலகத்தை, கட்சியின் இன்னொரு வேட்பாளரின் ஆதரவாளர்களே அடித்துடைத்தனர். கட்சியின் பிரதான சிக்கலே இதுதான். இதற்குள் குடும்ப பகையும் சேர, ஐ.தே.க கிளை கும்மியடிக்கிறது.
எப்படியும் இந்த குடுமிப்பிடி சண்டையே ஒருவரையொருவர் அடித்து வீழ்த்தி விடும். இப்போது யாழ் ஐ.தே.கவிற்குள் மூன்று வலுவான முகாம்கள் உள்ளன. மற்ற முகாமை எதிரியாக பார்த்து, கவிழ்த்து விடும் வேலைகளைத்தான் செய்கிறார்கள்.
ஆரம்பத்தில் சுதந்திரக்கட்சியின் யாழ் முகாமிற்குள்ளும் இப்படியான குழப்பங்கள் இருந்தன. ஆனால் சுதந்திரக்கட்சி இந்த குழப்பங்களை வளர விடாமல், ஒரு அணியாக்கி விட்டது. இந்த இடத்தில் ஐ.தே.க தலைமை இழைத்த தவறு, நிச்சயம் மாகாணசபை தேர்தலில் எதிரொலிக்கும். ஒவ்வொரு அணியும் ஏட்டிக்குப் போட்டியாக ஆளையாள் கவிழ்ப்பார்கள்.
இப்படியான நிலைமையில தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை விஜயகலா துறப்பதற்கான துளியளவு வாய்ப்பும் இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விஜயகலா மயிரிழையிலேயே வெற்றிபெற்றிருந்தார். அவரது அரசியல் எதிர்காலத்திற்கு, நாடாளுமன்ற வாக்குகளை அதிகரிப்பதுதான் ஒரே வழி. அதை தவிர்த்து இடையில் மாகாணசபைக்குள் நுழைய வாய்ப்பில்லை. நாடாளுமன்ற வாக்குகளை அதிகரிக்கும் ஒரு செயற்பாடாகத்தான் அண்மைக்காலமாக விஜயகலா புலி வாலை பிடித்து வைத்திருக்கிறார். அவர் கொஞ்சம் நிதானத் தவறியதில், பிரச்சனையாகி விட்டது. அந்த பிரச்சனையை வைத்து, உள்ளூர் வாக்குகளை அதிகரிக்கலாமா என்று பார்க்கிறார். அதுதான் அந்த திடீர் போஸ்டர்கள். அதற்கு மேல் ஒன்றுமில்லை.
கடந்தமுறையை போலவே இம்முறையும் மாகாணசபை தேர்தலை ஐ.தே.க எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. கட்சியின் யாழ் கிளையின் ஒரே நட்சத்திரம் விஜயகலாதான். கவர்ச்சிகரமான அடுத்த தலைவர்கள் யாருமே கட்சிக்குள் இல்லை. சட்டிக்குள் இருப்பதுதான் அகப்பையில் வரப்போகிறது.
ஆனால், ஐ.தே.க யாழில் வேட்பாளரின் தனிப்பட்ட பலத்தில் வெற்றிபெற முயலவில்லை. அப்படியான வேட்பாளர்கள் தமக்கு கிடைக்க வாய்ப்பில்லையென்பதாலோ என்னவோ, பணத்தையே நம்பியிருக்கிறார்கள். கடந்த உள்ளூராட்சி தேர்தல் சமயத்தில் சனசமூக நிலையங்கள், ஆலயங்களிற்கு பணம் ஒதுக்கி, பதிலாக வேட்பாளர்களை தருமாறு கட்சி கோரியிருந்தது. அதே போர்முலாவைத்தான் இம்முறை மாகாணசபை தேர்தலிலும் பாவிப்பார்கள்.
மாகாணசபை பிரதிநிதித்துவம் சில உறுதிப்படுத்தப்பட்டால், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் சுலபமாக வெற்றியீட்டலாமென்பதை விஜயகலா தெரிந்து வைத்திருக்கிறார். அந்த மாகாணசபை பிரதிநிதித்துவத்திற்குத்தான் புலிகள் ஏதாவது உதவி செய்வார்களா என விஜயகலா எதிர்பார்க்கிறார். முதலமைச்சர் கதிரைக்கல்ல.