பள்ளம பொலிஸ் பிரிவினுள் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இனம் காணப்படாத நபர் ஒருவர் தொடர்பில் அவரிடத்திலிருந்த தேசிய அடையாள அட்டையின் ஊடாகத் தகவல்களைத் தேடிய போது அந்த அடையாள அட்டையில் இருந்த நபர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒருவர் என்ற விடயம் தெரிய வந்துள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமை பள்ளம ஆனமடு வீதியில் பள்ளம பிரதேசத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த உயிரிழந்த நபர் அவ்வீதியில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதி பலத்த காயங்களுடன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ள நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
வில்பத்த பிரதேச தோட்டம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ள இந் நபர் தோட்ட உரிமையாளரிடம் வேறு ஒருவரின் அடையாள அட்டையினைக் காட்டி அந்த தோட்டத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.
விபத்தில் உயிரிழந்து இந்நபர் பற்றி அவரிடமிருந்த அடையாள அட்டை முகவரிக்குரிய தெபுவன பொலிஸ் நிலையத்தில் விசாரித்த போது அந்த அடையாள அட்டையில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நபர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக தெபுவன பொலிஸார் பள்ளம பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இவ்வாறு விபத்தில் உயிரிழந்த நபரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு அவர் யார் எவர் என்ற விபரங்களை அறிந்து கொள்வதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
இந்நபர் வேறு நபரின் அடையாள அட்டையினைப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரைக் கைது செய்துள்ள பள்ளம பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.