மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
மேலும் இக்கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த வாரம் வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கூட்டத்தில் இவ்வாண்டின் இறுதிக்குள் தனியார் மற்றும் பாடசாலை காணிகளை விடுவிப்பதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியிருந்தார்.
மேலும், இதனடிப்படையில் குறித்த காணிகளை அடையாளம் கண்டு உரியவர்களிடம் ஒப்படைத்தல் மற்றும் அகற்றப்படும் இராணுவ முகாம்களை அமைப்பதற்கான அரச காணியை இனங்கண்டு வழங்குதல் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.
அந்தவகையில், முறக்கொட்டாஞ்சேனை பாடசாலையில் உள்ள இராணுவமுகாமை அகற்றி அதற்கு பதிலாக புன்னைக்குடாவில் காணி வழங்குவது மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பாடசாலை காணிகளில் படையினர் முகாம் அமைத்துள்ளதாகவும் அவற்றினை அகற்றி பாடசாலைக் காணியை விடுவிப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி நகரில் விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ள பிரதேச செயலகத்திற்குச் சொந்தமான காணியை மீண்டும் பிரதேச செயலகத்திற்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம் விடுத்தார். இது தொடர்பிலும் பின்னர் ஆராயப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் அலிசாகீர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், முதலமைச்சர் செயலகத்தின் பிரதம செயலாளர், கிழக்கு மாகாண இராணுவத் தளபதி, கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.