80 வயதிலும் பதவிவெறி பிடித்து, தமிழீழ தேசியத் தலைவர் பிரபாரகரன் உருவாக்கிய தமிழ் மக்களின் அரசியல் இருப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருக்குலைக்க சிங்களப் பேரினவாதத்தால் சூசகமாக களமிறக்கப்பட்ட தமிழின துரோகியை அடையாளம் காட்டியநாள் நேற்று (நேற்றுமுன்தினம்). இது தமிழர் வரலாற்றில் கறைபடிந்த நாள் என்று வரலாறு தமிழருக்கு குறித்துச் சொல்லும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சிங்களத்துடன் இரண்டறக் கலந்து, நீதி அரசர் பதவிபெற்று சிங்களச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்களை சிறையில் தள்ளிய, வேடதாரியின் போலி வணக்கத்துடன் தொடங்கிய உரையை நேற்று (நேற்றுமுன்தினம்) அனைவரும் கேட்டிருப்பீர்கள்.
தமிழினத்தை கூறுபோட்டு உருக்குலைக்க செயற்படும் சிங்களதேசத்துக்கு சாமரம் வீசும் முன்னாள் முதலமைச்சரின் கட்சியின் முயற்சியே இது. கட்சி அரசியல் இன்றி தமிழர்களை ஒன்றாக்கி தமிழ்மக்கள் பேரவை ஊடாக சாத்வீக போராட்டம் மூலம் தமிழர் உரிமையை நிலைநாட்டப் போகின்றோம் என்று சொன்னவர்களின் சாயம் வெளுத்துபோனது.
அறிவாளிகளாக தம்மை அடையாளம் காட்டி தமிழ் மக்கள் பேரவையூடாக போராட்டங்களைக் கட்சி வேறுபாடுகள் இன்றிமுன்னெடுக்க இருந்த சந்தர்ப்பத்தையும் தவிடுபொடியாக்கி தடம்புரண்டு வேடதாரியின் புதிய கட்சியில் சங்கமித்த பேரவைக்கு ஒரு வாசகம் சொல்கிறேன். மறத் தமிழனால் ஒதுக்கபட்ட பின் போலிவேசம் போட்டு புதிய கட்சி ஆரம்பித்த பேரவை, உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டியது அவசியம்.
தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தின் போது முதலமைச்சர் பூண்டுகொண்ட வேடத்தை தானே கூக்குரலிட்டு தடம்புரண்டு ஆற்றியஉரை அவரது சுய மதிப்பைக் கேள்விக்குறியாக்கி நீங்கள் ஒரு பொய்யன் என்பதை பறைசாற்றியுள்ளது.
பொறுமையின் விளிம்பிலும் துரோகத்த னங்களின் எல்லையிலும் கூட்டமைப்பு புதிய விருட்சம் எடுக்கும் என்பதற்கான ஒரு உதாரணமே நேற்றுநடந்த நிகழ்வு. 99 வருடகால அரசியலைப் பற்றிப் பேசினார். அந்த அரசியல் போராட்டத்திலோ, அல்லது ஆயுதப் போராட்டதிலோ உங்களது பங்கு எங்கே இருந்தது? நீங்கள் சிங்களத்தில் தொங்கி, சிங்களத்தில் நீதிஅரசராகி, சொந்தப் பரம்பரையையே சிங்களத்துக்கு தாரைவார்த்து அங்குதான் பதவிப் பிரமானம் எடுப்பேன் என்று கூறி சிங்கள அடிவருடிகளுடன் அதனை செவ்வனே நிறைவேற்றி முடித்த நீங்களா தமிழ் மக்களின் விடுதலையை முன்னெடுத் துச் செல்லப் போகின்றீர்கள். புலிகளின் போராட்டத்தை ஒரு நோயாக தன்னுடைய வாயால் சித்தரித்திருக்கின்றார். அவர் பின்னால் அணி திரள்வானா மறத்தமிழன்? அது ஒருபோதும் நடக்காது.
முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பில் போட்டியிடுவதை தன்னால் நினைத்தும் பார்கக முடியவில்லை என்று கூறியிருந்தார். எழுதிக் கொடுத்ததை அப்படியே வாசிப்பது அவரது வழக்கம். அனைத்துக் கட்சிகளும் கேட்டுக்கொண்டால் மீண்டும் போட்டியிடுவேன் என்று அவர்முன்னம் கூறியதை மறந்துவிட்டார் போல.
கலாசாரத்தைகாக்கப் போவதாக இறுதியில் சொல்கிறார். பாலியல் குற்றவாளி பிரேமானந்தாவின் சீடனாக இருந்து கொண்டு பாலியல் குற்றம் செய்த பிரேமானந்தாவின் சீடர்க ளிற்கு வக்காளத்து வாங்கிய இவர்தான் கலாசாரத்தை காக்கபோகிறாரா?
யாழ்ப்பாணம் வந்த மோடியை சந்திக்க இவருக்கு மாத்திரமே கூட்டமைப்பு வாய்ப்புக் கொடுத்தது.
அந்தச் சந்தர்ப்பத்தை அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இவர் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கியுள்ள அப்பாவிகளுக்காக பாவித்திருக்கலாம். மாறாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யபட்டுள்ள பிரேமானந்தாவின் சீடர்களை விடுவிக்க கூறி எழுத்து மூலம்வேண்டுகோளை முன்வைத்தார். இந்தப் போலிவேசம் தேவையா? வரலாற்றுத் தவறின் அடையாளம் இவர். ஒரு நச்சுசெடி. என்னைப் பொறுத்தவரை அது வளர்ந்துவருவதற்கு முன்னர் மக்களாக அதனை அழித்து விட்டு தீபாவளி கொண்டாடவேண்டும் – என்றார்.