தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டிருந்தாலும் அவர்களின் சமஷ்டி தீர்வுக் கோரிக்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்று தென்னிலங்கையின் கடும்போக்குவாத கட்சிகளில் ஒன்றான தேசிய சுதந்திர முன்னணி தெரிவிக்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும், வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனினதும் ஒரே இலக்காக தமிழீழமே இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பிக்கின்ற புதிய கட்சி தொடர்பாக தென்னிலங்கையில் பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, முற்போக்கான சிந்தனை கொண்ட மக்களை இணைக்கின்ற பணியை தாம் செய்யவிருப்பதாக கூறினார்.
‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டாகப் பிளவடைந்திருக்கின்ற போதிலும் அவர்களின் ஒரே இலக்காக தமிழீழழம் இருக்கிறது. அந்த இலக்கை அடைவதற்கான பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருவதை பார்க்க முடிகிறது. ஒருபுறம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன் – சுமந்திரன் குழு சமஸ்டி தீர்வை கோரிவருகின்ற நிலையில், அடுத்தபுறம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினருடைய கோரிக்கையும் அதுவாக இருக்கிறது.
இந்த பரஸ்பர நிலையானது அவர்களிடையே ஏற்பட்ட தலைமைத்துவம் மற்றும் வேறு உள்ளக நெருக்கடியே தவிர, அந்த இலக்குகள், ஈழ நோக்கத்தில் ஏற்பட்ட பிளவுநிலையல்ல. இந்த பிளவிற்குள் ஸ்ரீலங்காவின் இறைமை மற்றும் சிங்கள – முஸ்லிம், இனத்தவர்களின் தேசிய ஐக்கியமும் முற்போக்கு சிந்தனைகொண்ட தமிழ் மக்களை ஒன்றிணைக்கின்ற பணியையே நாம் தற்போது செய்ய வேண்டியிருக்கிறது. அதனைவிட இந்தப் பிளவு, போலியான நெருக்கடிகளை பார்ப்பதிலிருந்து எமது கண்களை திசைதிருப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார்.