வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து வடக்கு ஆளுனர், வடக்கு நிர்வாகத்தில் தனது பிடியை இறுக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். இதன் முதற்கட்ட நடவடிக்கை இன்று வடக்கு கல்வியமைச்சில் இடம்பெற்றது.
நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் அலுவலகத்துக்கு இன்று (25) பிற்பகல் ஒரு மணியளவில் சென்ற ஆளுனர் வடமாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள், செயலாளர்கள் உள்ளிட்ட பலரையும் அழைத்து கலந்துரையாடல் நடத்தினார்.
இது தொடர்பில் ஆளுனர் அலுவலகம் அனுப்பி வைத்த செய்திக்குறிப்பில்-
“வடமாகாணத்தில் சில பாடசாலைகளில் மாணவர்கள் குறைவாக இருக்கின்ற போதும் ஆசிரியர்கள் அதிகமாக இருக்கின்ற நிலை காணப்படுவதாகவும் இது நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை காண்பிப்பதாகவும் இந்த கூட்டத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகவும் கஷ்டப் பிரதேசங்களில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான முன்னேற்பாடுகளை எதிர்வரும் வாரங்களில் ஏற்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்காக அனைத்து கல்விப் பணிப்பாளர்கள் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் செயலாளர் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
வடமாகாணத்தில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக வேண்டிய அனைத்தையும் செய்வதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அதற்கு மத்திய அரசின் உதவியை பெறுவதற்கு முயல்வதாகவும் எனவே இந்த நடவடிக்கைகளில் அதிகாரிகள் தமது முழு ஈடுபாட்டையும் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் குறுகிய காலத்தில் பாரிய வேலைகளைச் செய்யக் கூடிய வகையில் அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்குமாறு வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் பிரத்தியேக செயலாளர் ஜே எம் சோமஸ்ரீ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்“ என குறிப்பிடப்பட்டிருந்தது.