முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வீட்டை, ட்ரோன் கமரா மூலம் வீடியோப் பதிவு செய்ததாகக் கூறப்படும் இருவரை,அந்த ட்ரோன் கமராவுடன் கைது செய்ததாக, தலங்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர், வனவளத்துறைத் திணைக்கள அதிகாரியென்றும் மற்றையவர், ட்ரோன் கமரா இயக்குநர் எனவும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற வீதியில் அமைந்துள்ள தனது வீட்டை, ட்ரோன் கமரா மூலம் வீடியோப் பதிவு செய்வதாக, ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்த நிலையிலேயே, மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் வனவளத்துறைத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் மரக்கன்று நடும் வேலைத்திட்டத்துக்குத் தேவையான வீடியோப் பதிவொன்றே செய்யப்பட்டதாகவும் இதற்காக, ட்ரோன் கமரா மூலம் வீடியோப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுளளது..