இணையதள சேவைகளில் முன்னணி இடம் வகிக்கும் கூகுள் நிறுவனத்திலும் பல்வேறு மீ டூ புகார்கள் இருந்துள்ளது தற்போது வெளிவந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்படுத்திய 48 பேர் கூகுளில் இருந்து அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .
பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து மீ டூ என்ற ஹேஸ்டேக் மூலம் உலக அளவில் பெண்கள் தங்களின் மோசமான அனுபவங்களை பதிவிட்டு வருகின்றனர். பணியிடத்தில் பெண்கள் தங்களது உயரதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்தும் இன்றைய இளைய தலைமுறை பெண்கள் இதுபோன்ற விஷயங்களை மறைக்காமல் உடனடியாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவும் மீ டூ ஹேஸ்டேக் மிகப்பெரிய அளவில் பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சினிமா துறை, அரசியல், விளையாட்டு, பத்திரிகை ஜாம்பவான்கள் என யாரையும் விட்டுவைக்கவில்லை இந்த மீ டூ ஹேஸ்டேக். இந்த நிலையில் இணையதளத்தில் நம்பர் ஒன்னாக இருக்கும் கூகுள் நிறுவனத்திலும் பணியாற்றம் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இருந்தது வெளிவந்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு கூகுளின் ஆண்ட்ராய்ட் மொபைல் சிஸ்டத்தை உருவாக்கிய ஆண்டின் ரூபினுக்கு ரூபாய் 600 கோடி பணிக்கொடை அளிக்கப்பட்டு பாராட்டு விழா நடத்தி கூகுள் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை கூகுள் நிறுவனம் மறைத்துவிட்டதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்துள்ள கூகுள் நிறுவனத்தின் சிஇ சுந்தர் பிச்சை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் புகார்கள் மீது கூகுள் நிறுவனம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். பணியிடத்தில் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக வந்த பாலியல் புகார் காரணமாக இதுவரை 48 க்கும் அதிகமான பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் மூத்த மேனேஜர்கள் மற்றும் உயரிய பதவியில் இருப்பவர்கள் இவர்கள் யாருக்கும் பணியாளர்களுக்கான சலுகைகள் பணிக்கொடை எதுவும் வழங்கப்படவில்லை என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். எனினும் ஆண்டி ரூபின் பற்றி சுந்தர் பிச்சை எந்த கருத்தையும் கூறவில்லை.