பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான 1000 ரூபாயை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 30ஆம் திகதி அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவு தினமாகும். அன்றைய தினத்திற்குள் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் வகையில், நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.