கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கை, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா புறக்கணித்துள்ளார். இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்காவுடன் எழுந்துள்ள முரண்பாட்டையடுத்தே, இராணுவம் நடத்திய இந்த கருத்தரங்கை பொன்சேகா புறக்கணித்துள்ளார்.
இராணுவத்தின் எட்டாவது கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு கடந்த மாதம், 30ஆம், 31ஆம் திகதிகளில், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். எனினும், முன்னாள் இராணுவத் தளபதியும், இலங்கை இராணு அதிகாரிகளில் பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பெற்ற ஒரே ஒருவருமான சரத் பொன்சேகா இந்த கருத்தரங்கில் பங்கேற்கவில்லை.
எனினும், அவருக்கு அழைப்பு ஏற்பாட்டாளர்கள் முறைப்படி அனுப்பப்பட்டுள்ளது. ஆயினும், அவர் நிகழ்வில் பங்கேற்காதமைக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவுடன் அண்மைக்காலமாக பொன்சேகாவிற்கு முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. அதனால்தான் அவர் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. பொன்சேகா இராணுவ விடயங்களில் அளவிற்கு அதிகமாக தலையிடுவதாக அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து இராணுவத்தளபதி முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.