மே.இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இந்திய கேப்டன் விராட் கோலி மே.இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் முறையே 140, 157 ரன்கள் வீதம் குவித்தார். நேற்றைய 3-வது ஆட்டத்திலும் சதம் (107 ரன்) விளாசினார். இதன் மூலம் 47 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 3 ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த (ஹாட்ரிக்) முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
இதற்கிடையே, இலங்கை அணியின் விக்கெட் கீப்பரான சங்ககரா தொடர்ந்து 4 சதங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். இவர் 2015ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் வங்காள தேசத்துக்கு எதிராக 105 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக117 ரன்களும்,ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 104 ரன்களும், ஸ்காட்லாந்துக்கு எதிராக 124 ரன்களும் அடித்துள்ளார். இதன்மூலம் சங்ககரா ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
இந்நிலையில், இந்தியா மே.இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி நாளை மும்பையில் நடைபெறவுள்ளது.இந்த போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதமடித்து தொடர்ச்சியாக 4 போட்டிகளில் சதமடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.