தரவரிசையில் முதல்நிலையிலுள்ள 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் ஒரு வார காலமாக நடந்து வந்தது. கிராண்ட்ஸ்லாமுக்கு நிகராக வர்ணிக்கப்படும் இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் ஸ்லோனே ஸ்டீபன்சும் (அமெரிக்கா), 7-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினாவும் (உக்ரைன்) போட்டியிட்டனர்.
முதலாவது செட்டில் 2-வது கேமில் ஸ்விடோலினாவின் சர்வீசை முறியடித்த ஸ்டீபன்ஸ் அதன் தொடர்ச்சியாக முதல் செட்டை எளிதில் வசப்படுத்தினார். 2-வது செட்டில் சுடச்சுட பதிலடி கொடுத்த ஸ்விடோலினா மூன்று முறை எதிராளியின் சர்வீசை ‘பிரேக்’ செய்து அந்த செட்டை தனக்கு சாதகமாக மாற்றினார். கடைசி செட்டிலும் ஆக்ரோஷமாக ஆடிய ஸ்விடோலினாவின் கை ஓங்கியது. பந்தை வலுவாக வெளியே அடித்து விட்டு தானாக செய்யக்கூடிய தவறுகளை ஸ்டீபன்ஸ் அதிகமாக (48 முறை) செய்ததால், பின்னடைவை சந்திக்க நேரிட்டது.
2 மணி 23 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தின் முடிவில் ஸ்விடோலினா 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றியை பதிவுசெய்து வெற்றி வாகை சூடினார்.