திருமணங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவது பெரும் பொருள் இழப்போடு, மிகுந்த மனஉளைச்சலையும், தேவையற்ற பல பிரச்சினைகளையும் உருவாக்கிவிடுகிறது.
திருமணம் நடந்த பின்பு இருவருக்கும் பிடிக்காமல் போய், விவாகரத்து செய்யும்போது எத்தகைய நெருக்கடிகள் ஏற்படுமோ அதுபோல், திருமணம் நெருங்கி வரும்போது ரத்து செய்வதாலும் ஏகப்பட்ட நெருக்கடிகள் ஏற்படுகின்றன.
சம்பந்தப்பட்ட இளைஞன், இளம் பெண் அவர்களது குடும்பங்கள் அனைத்துமே அந்த நெருக்கடிகளில் சிக்கிக் கொள்கின்றன.
விஜயலட்சுமி பந்தையன் என்பவர் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து கூறியதாவது,
இருதரப்பினரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். நிச்சயதார்த்த விழாவில் இருவரும் பொருத்தமான ஜோடிகள் என்று புகழப்பட்டார்கள். அந்த இளைஞன் வெளிநாட்டில் படித்தவன். அந்த பெண் இங்கேயே நிறைய கற்றவள். இருவரும் மனம் விட்டுப்பேசினார்கள்.
இருவரது சம்மதத்துடன் திருமணத்திற்கு முகூர்த்த நாள் குறிக்கப்பட்டது.
கல்யாண வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தபோது, நிச்சயதார்த்த ஜோடி அவ்வப்போது செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது சில நாட்கள் அவள் தனது காதலனுடன் சுற்றிக்கொண்டிருப்பது அவனுக்கு தெரியவந்தது.
ஒருநாள் இரவு அவள் சம்பந்தம் இல்லாமல் ஓட்டலில் தங்கியதும் அவன் கவனத்திற்கு வந்தது. அவளிடம் அதுபற்றி அவன் கேட்டபோது, ‘திருமணத்திற்கு முன்பே என்னை கண்காணிக்கும் வேலையை தொடங்கி விட்டீர்களா?’ என்று ஆத்திரப்பட்டாள். வாக்குவாதம் முற்றிவிட்டது. இருதரப்பு பெற்றோரும் அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார்கள்.
கவுன்சலிங்கில் ‘அந்த திருமணம் வெற்றிகரமாக அமையாது’ என்பது உணர்த்தப்பட்டது. மிகுந்த மனவலியோடு அந்த திருமணம் ரத்து செய்யப்பட்டது.
நிச்சயதார்த்தத்திற்கு தயாராவதற்கு முன்பே, திருமண வாழ்க்கையை பற்றி இன்றைய இளைஞர்களும், இளம் பெண்களும் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.
அதில் இருகுடும்பத்தாருக்கு இருக்கும் கடமைகளையும், தங்களுக்கு இருக்கும் பொறுப்பு களையும் உணர்ந்துகொள்ளவேண்டும்.
திருமண ஏற்பாட்டில் மிகப்பெரிய கூட்டு முயற்சி இருக்கிறது. ஒருங்கிணைந்த உழைப்பு இருக்கிறது. அதன் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது.
இதை எல்லாம் நன்றாக உணர்ந்து இளைஞர்களும், இளம்பெண்களும் திருமண முடிவினை எடுக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் சம்மதம் தெரிவித்துவிட்டு திருமணத்திற்கு சில நாட்கள் இருக்கும்போது ‘தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை’ என்று கூறி மற்றவர்களுக்கு வலியை கொடுக்கக்கூடாது.