தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான நாகராஜனுக்கு ஆவா குழுவினர் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளருமான நாகராஜன் என்பவருடைய கையடக்க தொலைபேசியிற்கு நேற்றைய தினம் இரவு 07.30 மணியளவில் இரண்டு தொலைபேசி இலக்கங்களில் தொடர்புகொண்ட மர்ம நபர்கள் உதைபந்தாட்ட சம்மேளனத்தால் தடைசெய்யப்பட்ட கழகங்களை இணைத்து செயற்படாவிட்டால் உன் மீது வாள்வீச்சு நடாத்தப்படும் என எச்சரித்ததுடன் அண்மையில் வவுனியாவில் ஆவா குழுவின் துண்டுபிரசுரங்களை வெளியிட்டிருந்ததும் தாமே என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் நீ நாம் சொல்வதை கேட்காவிட்டால் வீட்டை விட்டு வெளியில் வரும்பொழுதே உன் மீதும் உன் குடும்பத்தினர் மீதும் எமது வாள்கள் பாயும் எனவும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்ததாகவும் நாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
இதனை தொடர்ந்து தாம் அவசர பொலிஸாரின் இலக்கமான 119 ற்கு தொடர்புகொண்டு முறைப்பாடு செய்ததாகவும் பொலிஸார் வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுல்ளார் இதேவேளை நாகராஜனின் மனைவி வவுனியா நகரசபை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது