முள்ளிக்குளம் கிராமத்தில் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட 77 ஏக்கர் காணியில் குடும்பம் ஒன்று தமக்கு உரித்தான காணிக்கு சுற்று வேலி அமைத்த போது குறித்த சுற்று வேலியை கடற்படையினர் உடைத்து குறித்த குடும்பத்தை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தி விட்டு சென்றுள்ளதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோறன்ஸ் லியோ தெரிவித்தார்.
விடுவிக்கப்பட்ட குறித்த 77 ஏக்கர் காணியில் தமக்கு உரிய காணியினை அடையாளம் கண்டு கொண்டு உரிய ஆவணங்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை குறித்த காணியின் உரிமையாளர்கள் சுற்று வேலி அடைத்துக் கொண்டிருந்தனர்.
இதன் போது அப்பகுதிக்கு வந்த கடற்படையினர் சுற்று வேலி அமைக்கும் குறித்த காணி தங்களுடையது என கூறி குறித்த வேலியை உடைத்து விட்டு குறித்த குடும்பத்தை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்து விட்டுச் சென்றுள்ளதாக அருட்தந்தை தெரிவித்தார்.
குறித்த காணியூடாக கடற்படையினர் பாதை ஒன்றை அமைத்திருந்தனர்.
எனினும் பிரதேச சபைக்கு சொந்தமான பிறிதொரு பாதை காணப்படுகின்ற போதும்,குறித்த பாதையை பயன் படுத்தாத கடற்படையினர் மக்களின் காணிகளை ஊடறுத்து அமைக்கப்பட்ட குறித்த பாதையூடாக பயணம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த பிரச்சினை தொடர்பாக உடனடியாக பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு, உடைக்கப்பட்ட குறித்த சுற்று வேலியை குறித்த குடும்பத்தினர் மீண்டும் அமைத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.