சிறிலங்காவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் நியமனம் அரசியல் யாப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது என்பதை மஹிந்தவின் வீட்டிற்குச் சென்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் தெரியபடுத்தியிருக்கிறார்.
சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, நாட்டின் புதிய பிரதமராக நியமித்திருந்த மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்மந்தனை சந்திப்பதற்கு அழைத்திருந்த நிலையிலேயே இந்த நிலைப்பாட்டை அவர் மிகத் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார்.
கொழும்பு 7இல் பிளவர் ரோட்டில் அமைந்துள்ள சிறிலங்கா பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு சந்திக்க வருமாறு மஹிந்த ராஜபக்ஷ விடுத்திருந்த அழைப்பை எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் நிராகரித்த நிலையிலேயே அவரது பிரத்தியேக இல்லமான விஜயராமவில் அமைந்துள்ள இல்லத்திற்குச் சென்று சம்மந்தன் சந்தித்திருந்ததாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ள சம்மந்தன் இதற்கு மஹிந்தவும் ஒத்துழைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை சம்மந்தனின் எதிர்க்கட்சிப் பதவி தொடர்பில் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இலையென்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
இந்த ஊடகச் செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவரினால் கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் சுமந்திரன் குறிபிட்டார்.