‘சர்கார்’ விவகாரத்தில் குடும்ப நண்பரான நடிகர் விஜய் மனது வருத்தப்படக்கூடாது என்பதற்காகப் பேசியபோது, அவரது பெருந்தன்மையான வார்த்தையால் நெகிழ்ந்து போனேன் என பாக்யராஜ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
‘சர்கார்’ பட வழக்கு முடித்து வைக்கப்பட்டவுடன் பேட்டி அளித்த பாக்யராஜ் விஜய் குறித்து அளித்த பேட்டி:
”விஜய் பட ரசிகர்களுக்கெல்லாம் சின்னதாக ஒரு மனத்தாங்கல் இருந்தது. படம் எங்கே தடைபடுமோ என்ற எண்ணம் இருந்தது. அது தடைபட வேண்டும் என்பது யாருடைய நோக்கமும் அல்ல, தனக்கு உரிய அங்கீகாரம் வேண்டும் என்பதற்காக வருண் நீதிமன்றம் வந்தார். இதில் அதிகம் காயப்பட்டது நான்தான்.
என் மகனே விஜய் ரசிகராக இருக்கும்போது, நான் எப்படி இப்படி ஒரு விவகாரத்தை எடுத்துக்கொண்டேன். தலைவர் பொறுப்பில் இருக்கும்போது என் மனதிற்கு நியாயம் எனப் பட்டதற்கு நான் கடைசிவரை நின்றே ஆகவேண்டும் என்கிற நிலைதான் அதற்குக் காரணம்.
விஜய் ரசிகர்கள் நிறையபேர் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. வருணுக்கும் எனக்கும் பெரிய பழக்கமில்லை. ஆனால், முருகதாஸுக்கும் எனக்கும் நல்ல பழக்கம். உதவி இயக்குநர் வருணுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதற்காக அவர் பக்கம் நின்றேன்.
விஜய் ரசிகர்கள் நிறைய பேர் இதைப் புரிந்துகொள்ளாமல் என் மகனை ட்விட்டரில் விமர்சித்தனர். இதில் நடிகர் விஜய்யைப் பாராட்டுகிறேன். எனது குடும்ப நண்பர், என் மகன் கல்யாணத்தில் முன்னாடி நின்று தாலி எடுத்துக்கொடுத்தார். அவர் மனது வருத்தப்படக்கூடாது என்பதற்காக இந்த கதை விவகாரம் தொடர்பாக ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்பதற்காக அவரிடம் பேசினேன்.
அதில் அவரது பெருந்தன்மை என்னைக் கவர்ந்தது. இது என் படம் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க என்று அவர் கூறாமல், ”சார், உங்க மனதுக்கு என்ன நியாயம்னு படுதோ அதைப் பண்ணுங்க, முருகதாஸ் தான் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளாரே” என்று தெரிவித்தார். அவரது பெருந்தன்மை என்னை நெகிழ வைத்தது. அதை விஜய் ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் இதுபோன்ற விவகாரங்களில் ட்விட்டரில், ஃபேஸ்புக்கில் படபடவென்று போடுவது அடுத்தவர்கள் மனது புண்படும். அவசரப்படுவது தவறு. இதில் இன்னொரு விஷயம் கதையை நீங்கள் வெளியே சொல்லிவிட்டீர்களே என்கிறார்கள். வழக்கே கதை சம்பந்தப்பட்டதுதானே”.
இவ்வாறு பாக்யராஜ் தெரிவித்தார்