தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் நடந்து முடிந்துள்ளது.
இன்றைய கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.
இன்றைய கூட்டத்தின் ஆரம்பத்தில், இரா.சம்பந்தன் உரையாற்றினார். மகிந்த ராஜபக்சவுடன் நடந்த சந்திப்பின் விபரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு தெரிவித்தார்.
இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் என்ன செய்வார், எப்படி செய்வார் என்ற விபரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தருமாறு தான் கோரியதாகவும், எனினும் இதுவரை மஹிந்த தரப்பு அதை தரவில்லையென்றும் சம்பந்தன் விளக்கமளித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது ஆதரவை நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தனக்கு தருமாறும், அரசாங்கத்தின் பெரும்பான்மையை நிரூபித்த பின்னர், படிப்படியாக அனைத்தும் செய்து தருவேன் என மஹிந்த ராஜபக்ச கூறியதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார். எனினும், அப்படியான வாக்குறுதிகளை நம்ப முடியாதென்றும் கூறினார்.
மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டது அரசியலமைப்பிற்கு முரணானது என அனைத்து நாடுகளும் கருதுவதாகவும், இலங்கை விவகாரத்தில் செல்வாக்கு செலுத்தும் நாடுகள் அதை மைத்திரியிடம் நேரில் தெரிவித்து விட்டதாகவும் சம்பந்தன் கூறினார்.
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டும்படி அந்த நாடுகள் மைத்திரியை வலியுறுத்தியதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.
இன்றைய கூட்டத்தில் பெரும்பாலானவர்கள், எழுத்துமூல உறுதிமொழியை பெற்றுக்கொள்ளாமல் மஹிந்தவை ஆதரிக்க முடியாதென தெரிவித்தனர்.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க அரசை காப்பாற்றினால் இனிமேல் இனப்பிரச்சனை விவகாரத்தில் எதையும் சாதிக்க முடியாதென்றும் தெரிவித்தனர்.
இந்த கருத்து இன்றைய கூட்டத்தில் பெரும்பாலானவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹிந்த தரப்பிடம் கேட்டதை போல, ஐதேகவிடமும் இனப்பிரச்சனை தீர்வு விவகாரத்தில் உறுதிமொழி கேட்டுள்ளதாக சம்பந்தன் குறிப்பிட்டார்.
ஐதேகவை ஆதரித்து இனிமேல் எதுவும் ஆகப்போவதில்லையென்ற அப்பிராயம் இன்றைய கூட்டத்தில் வெளிப்பட்டது.
அதேநேரம், மஹிந்த ராஜபக்ச தரப்பிலிருநது உத்தரவாதமான வாக்குறுதியெதுவும் கிடைக்கவில்லை. இதனால், அடுத்து வரும் சில நாட்களிற்கு பொறுத்திருந்து பார்ப்பதென முடிவாகியுள்ளது.
ஐதேக அரசா? சு.க அரசா? என்பதில் இன்று கூட்டமைப்பு முடிவெதையும் எட்டவில்லை.
நாடாளுமன்றம் கூடுவதற்கு இன்னும் சில நாட்கள் உள்ளதால், இன்னும் ஓரிரு நாட்கள் காத்திருப்பதென முடிவாகியுள்ளது.
இதேவேளை, இன்று நடந்த கட்சி தலைவர்கள் சந்திப்பில், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டுமென பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தின.
இதையடுத்து, வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்த அறிவித்தலை ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.
முன்னதாக, இன்று காலை நடந்த மஹிந்த -சம்பந்தன் சந்திப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை மஹிந்த ராஜபக்ச கோரினார்.
அது உடனடியாக கிடைக்காத பட்சத்தில், ஐதேகவை ஆதரிப்பதிலிருந்தாவது பின்வாங்கியிருக்குமாறு மஹிந்த ராஜபக்ச கோரினார்.