நாட்டில் புதிய அரசியல் மாற்றம் இடம்பெற்றுள்ள நிலையில் இம்முறை மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஸ்டிப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லாட்சி அரசு ஆரம்பிக்கப்பட்டு கடந்த சில வருடங்கள் மாவீரர் நாள் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்கப்பட்டு வந்தன.
இதற்கு அரச தரப்பில் இருந்து கண்காணிப்பு இருந்த போதும் தடைகள் விதிக்கப்படவில்லை.
ஆனால் இம்முறை நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக புதிய அரச தரப்பினர் இம்முறை மாவீரர் தின நிகழ்வுகள் அனுஸ்டிப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சால் பாதுகாப்பு படைத்தரப்பு மற்றும் பொலிசாருக்கு குறித்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலிஸ்மா அதிபர் குறித்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் ஏனைய தரப்பினருடன் ஆலோசனை மேறகொண்டுள்ளார்.
வடக்கு கிழக்கு முழுவது தமிழ் மக்களால் கார்த்திகை 27 ஆம் திகதி அன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வுப்பூர்வமான எழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது என்பதுடன் இம்முறை மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பொதுமக்களால் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது