நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேசமும் வலியுறுத்தி வருகின்றது.
இந்நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதியே நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான சாத்தியப்பாடு காணப்படுவதாக அரசாங்க தகவல்களை மேற்கோள்காட்டி சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில், எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படுமென ஜனாதிபதி தெரிவித்ததாக சபாநாயகர் குறிப்பிட்டார்.
அவ்வாறு 7ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுமாக இருந்தால், அதற்கான வர்த்தமானி நேற்று அல்லது நேற்று முன்தினம் வெளியாகியிருக்க வேண்டும்.
காரணம் நாடாளுமன்றத்தைக் கூட்ட குறைந்தது மூன்று நாட்களாவது அவசியமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்பிற்கு முரணானமென ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளதோடு, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் பிரதமர் மஹிந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வானது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய சந்தர்ப்பமாக அமையவுள்ளது.
இவ்வருடத்தின் இரண்டாம் கட்ட நாடாளுமன்ற அமர்வு ஏற்கனவே முடிவுறுத்தப்பட்டு, எதிர்வரும் 16ஆம் திகதி கூட்டப்படுமென ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை விடுத்திருந்தார்.
இந்நிலையில், யார் என்ன கூறினாலும் 16ஆம் திகதியே நாடாளுமன்றம் கூடுமென மஹிந்த தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.<