தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை பெறுவதற்கான கொள்கையுடனேயே பயணித்து வருகிறது. அந்த அடிப்படையில் சமஷ்டி தேவையில்லை என்று கூட்டமைப்பின் கொள்கைக்கு அப்பாலான விடயத்தை சுமந்திரன் கூறியிருப்பாரேயானால் அது தவறாகும்.
இவ்வாறானதொரு கருத்தை அவர் கூறியிருப்பாரேயானால் அவர் பிழையான திசையில் சிந்திக்கிறார் என்றே கருத வேண்டியிருக்கிறது என்று தெரிவித்த தமிழீத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழிழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், புதிய அரசியலமைப்புக்கான பணிகளில் கூட நாங்கள் (கூட்டமைப்பு) சமஷ்டியைத்தான் வலியுறுத்தி வருகின்றோம். அந்த அடிப்படையில் சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பை திசைதிருப்புவதற்கான வழியாக இருக்குமேயானால் அதனை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கேள்வி: ஜனாதிபதி அமைத்த வடகிழக்கு அபிவிருத்திச் செயலணிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்டமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விமர்சனங்களை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: விடுதலைப்புலிகளுடைய காலத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களின் அபிவிருத்திகள் பற்றி சிந்தித்திருக்கவில்லை. அன்று ஒரு விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததனால் அதுபற்றி சிந்திக்க முடியாமல் போய்விட்டது. அந்தப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வையும் வாழ்வாதாரத்தையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு ஏற்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் இன்றைய நிலையில், மலசல கூடங்கள் இல்லாத வீடுகள், சிதைவடைந்த உள்ளுர்ப் பாதைகள், கொட்டைகை வீடுகள் என்று எங்களுடைய மக்கள் பல பிரச்சினைகள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே இவற்றைச் சரிசெய்து கொடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. இதுவரை காலமும் அரசியல் தீர்வு விடயத்தில் முழுமையாகக் கவனம் செலுத்திய காரணத்தினால், எங்களுடைய மக்களின் அபிவிருத்தியில் எங்களால் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது. எனவே இனிவரும் காலங்களில் அரசியல் தீர்வைப் பெறுவதற்கான முயற்சிகள் எந்தளவுக்கு எடுக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு அபிவிருத்தியிலும் கவனம் எடுப்போம்.
கேள்வி: மேற்படி கூட்டத்தில் எவ்வாறான விடயங்களை வலியுறுத்தியிருந்திர்கள்? நீங்கள் வலியுறுத்திய விடயங்கள் செயல் வடிவில் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
பதில்: காணி அபகரிப்புகள், விடுவிக்கப்படாமல் இருக்கின்ற மக்களது நிலங்கள் மற்றும் வேலையில்லாப் பட்டதாரிகளுடைய பிரச்சினைகள் சம்பந்தமாக கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஜனாதிபதியிடம் வலுவாக எடுத்துக் கூறியிருந்தோம்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் எவ்வாறு நடைபெறுகிறதோ அதேபோன்று தான் அபிவிருத்திச் செயலணிக்கூட்டமும் நடைபெற்றது. இங்கு ஜனாதிபதி தலைவராக இருக்கிறார்.
மேலும், மகாவலித் திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் காணி அபகரிப்பு, கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கேப்பாபிலவு, முள்ளிக்குளம் ஆகிய இடங்களில் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்படாமை எனப் பல பிரச்சினைகள் தொடர்பில் அன்றைய தினம் விவாதித்திருந்தோம். இவை சம்பந்தமாக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி எதிர்வரும் மாதம் மூன்றாம் திகதி மீண்டும் கூடவிருக்கின்ற செயலணிக் கூட்டத்தில் உரிய பதிலை வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருக்கிறார்.
எங்களுடைய மக்கள் அன்றாடம் எதிர்கொள்கின்ற வாழ்வாதாரப் பிரச்சினைகள், மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை எங்களிடத்தில் இருக்கிறது. எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வை எங்களுடைய மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்புடன் அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை எங்களிடத்தில் இருக்கிறது. இவ்விரண்டையும் ஒரு சேர கொண்டு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
கேள்வி: 2015இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துக்குப் பின்னரான கடந்த மூன்றரை வருடங்கள் அரசியலமைப்புப் பணி முயற்சிகளில் காலம் கடத்தியும் அந்தப்பணி முழுமை பெறாத ஒரு சூழ்நிலையில், இன்று அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபட தீர்மானித்திருக்கிறீர்கள். இந்நிலையில் இந்த அபிவிருத்திச் செயலணியாவது தமிழ் மக்களிடம் உரிய முறையில் சென்றடையும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
பதில்: அரசாங்கத்தில் நம்பிக்கை வைத்து புதிய அரசியலமைப்புக்கான பணியில் நாங்கள் ஈடுபட்டிருக்கவில்லை. சர்வதேசத்தின் தலையீடு இந்தப் பணியில் இருந்த காரணத்தினால் தான் அவர்களை (சர்வதேச சமூகம்) வைத்துக் கொண்டு எதையாவது பெறலாம் என்ற நம்பிக்கையுடன் தான்நாங்கள் இந்தப் பணியில் ஈடுபட்டோம். சர்வதேசம் எங்கள் பக்கம் கைநீட்டி‘நீங்கள் ஒத்துழைக்கவில்லை; அதனால் தான் அந்தப்பணி முழுமை பெறவில்லை’ என்று கூறுவதற்கு இடமளிக்கக் கூடாது என்ற காரணத்திற்காகத்தான் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாவிட்டாலும் கூடஎந்தவித குழப்பங்களையும் விளைவிக்காது கடந்த மூன்று வருடங்களாகப் புதிய அரசியலமைப்புப் பணியில் எங்களை ஈடுபடுத்தி வருகின்றோம்.
அந்த அடிப்படையில் தான் எங்களுடைய வலுவான கோரிக்கைகளை முன்வைத்து அந்தப் பணி எங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதற்காக அரசாங்கத்துக்கு வெளியிலிருந்து கொண்டு சில விடயங்களில் அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கி வருகின்றோம். ஆனால் இந்த ஆதரவை தொடர்ச்சியாக எங்களால் வழங்கமுடியாது. இருக்கின்ற குறுகிய காலத்துக்குள் எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வேண்டும் என்று அரசுக்குக் காலக்கெடு விதிக்க வேண்டும். அதற்கு சர்வதேசமும் ஒத்துழைக்க வேண்டும். சர்வதேசத்தின் தலையீடு இருந்த காரணத்தினால் தான் நாங்கள் எங்களுடைய ஒத்துழைப்பை அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தோமே தவிர அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து அல்ல. எனவே சர்வதேசம் தான் எங்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கமும் சர்வதேசமும் இனிமேலும் நழுவல் போக்கை கடைப்பிடிக்க முடியாது. இந்த விவகாரத்தில் சர்வதேசம் நழுவ முடியாத நிலைமையை நாங்கள் இன்று உருவாக்கியிருக்கின்றோம்.
அதேபோல் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்ற அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்திகள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெறுவதற்கான வழி இல்லாது இருந்த சூழ்நிலையில், ஜனாதிபதி தானாக முன்வந்து ஒரு செயலணியை அமைத்து அதில் கலந்து கொண்டு பிரச்சினைகளை முன்வைக்குமாறு அழைப்பு விடுக்கின்ற பொழுது அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது என்பது என்னைப் பொறுத்தவரை முட்டாள்தனமான செயலாகும். எங்களுடைய மக்கள் தங்களுடைய நியாயமான தேவைகளுக்காக போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், அரசாங்கத்தின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியிடம் தான் எங்களது மக்களுடைய நியாயமான போராட்டங்கள், கோரிக்கைகள், தேவைகள் போன்றவற்றைக் கூற முடியும். எனவே அதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்படுகின்ற சூழ்நிலையில் அதைப் புறக்கணிப்போமேயானால் அது எங்களுடைய மக்களுக்கு செய்கின்ற துரோகமாக அமைந்துவிடும்.
அந்த அடிப்படையில் எதிர்வரும் மூன்றாம் திகதி கூடவிருக்கின்ற அபிவிருத்தி செயலணிக் கூட்டத்தில் சில விடயங்களுக்கு பதில் தருவதாக எங்களிடம் கூறியிருக்கிறார். எனவே கிடைத்திருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்த வேண்டுமே தவிர, அதைப் புறக்கணித்து விட்டு வீரப்பேச்சுகள் பேசுவதால் எங்களுடைய மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை.
மகாவலித் திட்டத்துக்குப் பொறுப்பானவர் ஜனாதிபதி; அதேபோல் இராணுவமும் அவருக்குக் கீழ் தான் வருகிறது. எனவே மகாவலி விவகாரம் தொடர்பாகவும் இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கின்ற மக்களுடைய காணிகள் தொடர்பாகவும் ஜனாதிபதியுடன் தான் பேசித் தீர்வைப் பெற வேண்டும்.
எனவே ஜனாதிபதியினுடைய அபிவிருத்தி செயலணி, எங்களுடைய மக்களது பிரச்சினைகளைத் தட்டிக்கேட்பதற்கான ஒரு தளத்தை ஏற்படுத்தித்தந்திருக்கிறது. அந்த அடிப்படையில் எந்த விமர்சனங்கள் வெளியிலிருந்து வந்தாலும் இந்த செயலணியில் கலந்து கொண்டு எங்களுடைய மக்களது பிரச்சினைகளைத் தட்டிக்கேட்டு அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க முயற்சிகளை எடுப்போம். விமர்சனங்களை பார்த்து ஒதுங்கிப்போகமாட்டோம்.
கேள்வி:சமஷ்டித் தீர்வு வேண்டாம், மாகாண சபையில் திருத்தங்களைக் கொண்டு வந்து அதிகாரம் பகிரப்பட்டால் போதும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் காலியில் வைத்து கூறியிருக்கிறார். இதுவரை காலமும் சமஷ்டி என்று கூறிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அதிலிருந்து விலகியிருப்பதாகத் தோன்றுகின்றதே..?
பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வைப் பெறுவதற்கான கொள்கையுடனேயே பயணித்து வருகிறது. அந்த அடிப்படையில் கூட்டமைப்பின் கொள்கைக்கு அப்பாலான விடயங்களை சுமந்திரன் கூறியிருப்பாரானால் அது தவறான விடயமாகும். சுமந்திரன் இவ்வாறான கருத்தைக் கூறியிருப்பாரானால் அவர் பிழையான திசையில் சிந்திக்கிறார் என்றே என்னால் உணர முடிகிறது.
எங்களுடைய தேசத்தில் நாங்கள் எங்களை ஆளுகின்ற அடிப்படையில் தீர்வு வரவேண்டும் என்று தான் நாங்கள் சமஷ்டிக் கோரிக்கையைக் கோரி வருகின்றோம். புதிய அரசியலமைப்புக்கான பணிகளில் கூட நாங்கள் சமஷ்டியைத்தான் வலியுறுத்தி வருகின்றோம். அந்த அடிப்படையில் சுமந்திரனுடைய கருத்து தவறானது. இந்தக் கருத்து கூட்டமைப்பை திசை திருப்புவதற்கான வழியாக இருக்குமேயானால் அதனை ஏற்றுக் கொள்ள நான் தயாரில்லை.
சமஷ்டியை தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதே கூட்டமைப்பினுடைய நிலைப்பாடு. அந்தப் பாதையில் தான் நாங்கள் பயணிப்போம். சுமந்திரன் அங்கம் வகிக்கும் கட்சி அவருடைய கருத்தை ஒத்த முடிவை எடுத்தால் அந்தக் கருத்துடன் எங்களால் பயணிக்க முடியாது.
கேள்வி : தமிழ்த் தேசிய அரசியலில் தலைமை ஏற்கத் தயார் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அறிவித்திருக்கிறாரே.. அதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் விக்னேஸ்வரனை அரசியலுக்குள் கொண்டுவந்து முதலமைச்சராக்கியது. அந்த அடிப்படையில் முதலமைச்சரைக் கூட்டமைப்பினர் மதிக்கவில்லை என்றும் முதலமைச்சர் கூட்டமைப்பைச் சரியான முறையில் கையாளவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இன்றைய சூழ்நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விட்டு வெளியேறி தேர்தலொன்றுக்கு முகம் கொடுப்பாரேயானால் அது எங்களுடைய மக்களை அதலபாதாளத்துக்குள் கொண்டு செல்லும் நிலைமையை உருவாக்கும்.
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சிங்களக் கட்சிகளுடைய கால்கள் வட கிழக்கில் பலமாக பதிக்கப்பட்டிருக்கிறதுடன், சில இடங்களில் சிங்கள கட்சிகளுடைய ஆட்சி நடக்கக் கூடிய சூழலும் ஏற்பட்டிருக்கிறது.
எனவே பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சருடன் பேசுமாறு நாங்கள் சம்பந்தனிடம் வலியுறுத்தியிருக்கின்றோம். இரு தரப்புக்குமிடையில் ஏற்பட்டிருக்கின்ற இடைவெளியை சரிசெய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கின்றோம்.
மக்களுடைய இலட்சியம், மக்களுடைய விடுதலை, அவர்களுடைய அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பாக உளப்பூர்வமாக சிந்திக்கின்ற எவரும் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்லக்கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடு. நீண்ட போராட்டங்களுடாக பலவற்றை இழந்து நிற்கின்ற தமிழ் மக்களை தெரிவில் விட்டுவிட முடியாது. அந்த அடிப்படையில் மக்களைப் பிரித்து ஆழ்வதை விட்டுவிட்டு அனைவரும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு.
நாங்கள் பிளவுபட்டு தேர்தல்களில் நிற்போமேயானால் சிங்கள தேசியக் கட்சிகள் வடக்கை ஆளும் அபாய நிலைமை ஒன்று தோன்றக்கூடிய நிலைமையிருக்கிறது. பிழை சரிகளைப் பேசி ஒற்றுமையை பலப்படுத்துவதே காலத்தின் தேவையாகும். அவ்வாறு இல்லாமல் மக்களைக் கூறுபோட நினைத்தோமேயானால் தமிழ் மக்களுடைய விடுதலை என்பது பொய்யான வார்த்தையாக மாத்திரமே இருக்கும்.