ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் பொதுச்செயலாளர் அனந்தி சசிதரனை, தனது கட்சியில் இணைத்துக் கொள்ள வாய்ப்பில்லையென முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நல்லூரிலுள்ள முன்னாள் முதலமைச்சரின் புதிய வதிவிடத்தில் நடந்த சந்திப்பில் இந்த தகவல் பரிமாறப்பட்டதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.
முன்னாள் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணியென்ற புதிய கூட்டணியொன்றை கடந்த மாத இறுதியில்-ஒக்ரோபர் 24ம் திகதி- நல்லூரில் வைத்து அறிவித்திருந்தார். முதலமைச்சரின் அறிவிப்பு வருவதற்கு முன்னதாக- ஒக்ரோபர் 21ம் திகதி- ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் என்ற பெயரில் அனந்தி சசிதரன் ஒரு கட்சியை ஆரம்பித்தார்.
அனந்தி சசிதரன் கட்சி ஆரம்பித்தபோது, அது முதலமைச்சரின் பின்னணியில் ஆரம்பிக்கப்பட்டதாக ஒரு செய்தி உலாவியது. ஆனால், அப்பொழுதே அது பொய்யான செய்தியென தமிழ் பக்கம் செய்தி வெளியிட்டிருந்தது. அனந்தி கட்சி ஆரம்பிக்கும் விடயத்தை முதலமைச்சருடன் கலந்துரையாடவில்லையென்பதுடன், கட்சி ஆரம்ப நிகழ்விற்கான அழைப்பிதழை இன்னொருவர் மூலம் பார்த்தே முதலமைச்சர் அறிந்து கொண்டிருந்தார்.
இதேவேளை, மாகாணசபை பதவிக்காலம் முடிந்ததும் க.வி.விக்னேஸ்வரன் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து வெளியேறும் பணிகளில் இருந்தார். தற்போது நல்லூர் ஆலயத்திற்கு மிக நெருக்கமாக, கோவில் வீதியில் ஒரு வீட்டை வாடகைக்கு பெற்று, அங்கு இடம்மாறியிருக்கிறார். புதிய வீட்டிலிருந்தபடி, புது கட்சிக்கான தயாரிப்புக்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், க.வி.விக்னேஸ்வரனை சந்தித்து பேச அனந்தி சசிதரன் பலமுறை முயற்சித்த போதும், விக்னேஸ்வரன் அவருக்கு நேரம் ஒதுக்கி கொடுக்கவில்லை. பகீரத பிரயத்தனத்தின் பின்னர், கடந்த செவ்வாய்க்கிழமை காலை, க.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து பேசினார் அனந்தி.
அந்த சந்திப்பு குறித்த தகவல்களை தமிழ்பக்கம் நம்பகரமாக பெற்றுள்ளது.
தன்னுடன் கலந்தாலோசிக்காமல் அனந்தி கட்சி ஆரம்பித்ததில் இருந்த அதிருப்தியை விக்னேஸ்வரன் நேரடியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அத்துடன், இன்னொரு கட்சியை ஆரம்பித்து பொதுச்செயலாளரும் ஆன பின்னர், தனது கட்சிக்குள் அங்கம் வகிப்பது பொருத்தமில்லையென நாகரிகமாக அனந்திக்கு சுட்டிக்காட்டியுமுள்ளார்.
தான் கட்சி ஆரம்பித்தது, விக்னேஸ்வரனின் அணிக்கு போட்டியாக அல்லவென அனந்தி பதிலளித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையிலுள்ளவர்களை நம்ப முடியாது. அவர்கள் அரசியல் செயற்பாட்டாளர்களுமல்ல. அரசியலில் தொடர்ந்து நீடிப்பார்களா தெரியாதென்ற சந்தேகத்தில்தான் கட்சியை ஆரம்பித்ததாக அனந்தி சசிதரன் விளக்கமளித்திருக்கிறார்.
அனந்தி தனிக்கட்சி ஆரம்பித்துள்ளதால், அவரை தனி அரசியல் இயக்கமாக செயற்படுமாறும், தேர்தல் ஒன்று வரும் சமயத்தில் கூட்டணி குறித்து ஆராயலாமென்றும் இந்த சந்திப்பில் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அனந்தியை தனது கூட்டணிக்குள் இணைப்பதில்லையென்ற நிலைப்பாட்டிலேயே விக்னேஸ்வரன் இருப்பதாக தமிழ்பக்கத்திற்கு கிடைத்த தகவல்கள்