தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வரும் 07ம் திகதி சந்தித்து பேச அழைப்பு விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை தொலைபேசியில் அழைத்து பேசிய ஜனாதிபதி, இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இது குறித்த அழைப்பு கூட்டமைப்பின் எம்.பிக்களிற்கு வழங்கப்பட்டுள்ளது.
எனினும், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இந்த அழைப்பை நிராகரிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பியொருவரை உருவியெடுத்து, அவருக்கு பிரதியமைச்சர் கொடுத்துள்ள நிலையில், மைத்திரியை சென்று சந்திக்க கூடாதென அவர் நேரடியாகவே இரா.சம்பந்தனிடம் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், வரும் 7ம் திகதி கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு ஜனாதிபதி மாளிகையில் மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பில் ஈடுபடும் வாய்ப்புக்களே அதிகமாக உள்ளன.
இதேவேளை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் மைத்திரி இதேவிதமான அழைப்பொன்றை விடுத்திருந்தார். இதன்படி அந்த இரண்டு கட்சிகளின் தலைவர்களும் இன்று காலையில் ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளனர்.