தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து நான்கு பேர் தாவுகிறார்கள், மூன்று பேர் தாவுகிறார்கள் என நீடித்த பரபரப்பு நிலை அடங்கி விட்டதாக தமிழ் பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது. தற்போதைய நிலையில் அம்பாறை எம்.பி கோடீஸ்வரன் தொடர்பில் மாத்திரமே, கூட்டமைப்பு தலைமைக்கு நிச்சயமின்மை நிலவுவதாக தமிழ்பக்கம் அறிந்துள்ளது.
கூட்டமைப்பின் நான்கு எம்.பிக்களை குறிவைத்து மைத்திரி, மஹிந்த அணி வலைவீசியது. இதில் வியாழேந்திரன் மாத்திரம் உடனடியாக சிக்கிக் கொண்டார். மற்றையவர்கள் நிச்சயமற்ற நிலையில் இருந்தனர். நிச்சயமற்ற நிலையில் இருந்தவர்களை, வழிக்கு கொண்டு வர கூட்டமைப்பு நேற்று வித்தியாசமான உத்தியொன்றை பிரயோகித்திருந்தது. தற்போதைய நிலையில் அந்த விவகாரத்தை வெளியிடுவது பொருத்தமல்ல என தமிழ்பக்கம் கருதுவதால், அது குறித்த செய்திகளை தவிர்த்துள்ளோம்.
கட்சி தாவும் எண்ணம் எதுவுமில்லையென நேற்று நேரடியாகவும், மறைமுகமாகவும் கூட்டமைப்பின் எம்.பிக்கள் அறிவித்திருந்தார்கள். அதனால் கூட்டமைப்பின் தலையில் தொங்கிய பெரிய கத்தி தற்காலிகமாக அகன்றுள்ளது.
ஆனால், அம்பாறை எம்.பி கோடீஸ்வரன் தொடர்பில் கூட்டமைப்பின் தலைமை நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பில் நேற்று பலமுறை செல்வம் அடைக்கலநாதனை தொடர்புகொண்டு சம்பந்தன் பேசியபடியிருந்தார். கோடீஸ்வரனுடன் செல்வம் அடைக்கலநாதனும், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலரும் நேற்றும் பேச்சு நடத்தியிருந்தார்கள். அப்போது, கூட்டமைப்பை விட்டு வெளியேறமாட்டேன் என கோடீஸ்வரன் உறுதியளித்துள்ளார்.
ஆனால், கூட்டமைப்பின் தலைமைக்கு கலக்கத்தை கொடுத்தபடியிருப்பது- வியாழேந்திரனுக்கும், கோடீஸ்வரனுக்கும் இடையில் நடந்த உரையாடல். வியாழேந்திரன் கனடாவில் இருந்து நாடு திரும்பும் வழியில், வழித்தடம் மாறுவதற்காக காத்திருந்த சமயத்தில் கோடீஸ்வரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது, தனது கட்சி தாவும் முடிவை அறிவித்தார்.
வியாழேந்திரனின் முடிவு சரியானது என தான் குறிப்பிட்டதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில பிரமுகர்களிடம் கோடீஸ்வரனே குறிப்பிட்டுமுள்ளார்.
வியாழேந்திரன் கட்சி தாவிய பின்னரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்களிடம், அவர் சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறார் என கோடீஸ்வரன் குறிப்பிட்டதாக கூட்டமைப்பின் தலைமைக்கு தகவல் சென்றிருக்கிறது.
இந்த தகவல்களின் பின்னர், செல்வம் அடைக்கலநாதனுடன் தொலைபேசியில் சில அறிவுறுத்தல்களை வழக்கினார் சம்பந்தர். கோடீஸ்வரனுடன் பேசிவிட்டு, “அவரை நம்புகிறேன். அவர் கட்சி தாவமாட்டார்“ என்ற உத்தரவாதத்தை நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு செல்வம் அடைக்கலநாதன் வழங்கியிருக்கிறார்.
இதேவேளை, வியாழேந்திரன் கட்சி தாவிய செய்தி, இரா.சம்பந்தனை மனதளவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று முழுநாளும் மிகுந்த அப்செற்றில் இருந்தார். இப்படி விலைபோகும் எம்.பிக்கள் இருந்தால், எப்படி நாங்கள் அரசியல் தீர்வை நோக்கி பயணிக்க முடியும் என்று நேற்று விரக்தியுடன் எம்.பிக்கள் சிலருடன் பேசியுமிருந்தார்.