வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை வரவேற்று கிளிநொச்சியில் பல இடங்களிலும் இன்று (05) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
தமிழ் தேசியத்தின் காவலனே என அவற்றில் க.வி.விக்னேஸ்வரன் விளிக்கப்பட்டிருந்தார்.
வடக்கு முதலமைச்சராக பதவி வகித்த க.வி.விக்னேஸ்வரன், கடந்த ஒக்ரோபர் 24ம் திகதி தமிழ் மக்கள் கூட்டணியென்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணியொன்றிற்கான அறிவித்தலை விடுத்தார்.
இது இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை தோற்றுவித்திருந்தது. சில நாட்கள் பரபரப்பாக இந்த விடயம் பேசப்பட்ட நிலையில், ஒக்ரோபர் 26 பிரதமர் மாற்றம் அனைத்து விடயங்களையும் மேவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சில நாட்களின் பின் முதலமைச்சர் பற்றிய செய்திகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.
இன்றைய தினம் கிளிநொச்சியில் பரவலாக முதலமைச்சருக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வன்னி மக்கள் என சுவரொட்டியின் கீழ் ஒட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஜமீன் என அரசியல் வட்டாரத்தில் செல்லமாக அழைக்கப்படும் தமிழரசுக்கட்சியின் சி.சிறிதரனின் கோட்டையான கிளிநொச்சியில் இந்த சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பொதுதேர்தல் சமயத்தில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ஆகியவற்றின் வேட்பாளர்களையே கிளிநொச்சிக்குள் நுழைய விடாமல் சிறிதரனின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.