பிரதமர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பே ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்படவேண்டும் என ஐக்கியதேசிய கட்சி பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பிலான வேண்டுகோள் அடங்கிய கடிதமொன்றினை பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் கையளித்துள்ளதாக ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் பொலிஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்றவேளை அங்கு பொலிஸ்மா அதிபரோ வேறு எந்த சிரேஸ்ட அதிகாரியோ இருக்கவில்லை.
இதன்காரணமாக அங்கு காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரிடம் கடிதத்தை கையளித்துவிட்டு பொலிஸ்மா அதிபரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்தோம்.
சபாநாயகர், ரணில் விக்கிரமசிங்கவையே பிரதமராக ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் காரணமாக பிரதமரிற்கு வழங்கப்படும் பாதுகாப்பை அவரிற்கு வழங்குமாறு பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளோம்“ என தெரிவித்துள்ளார்.