உடபுஸ்ஸலாவவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று பேர் படுங்காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராகலையிலிருந்து கொட்டம்பே பகுதிக்கு சென்று, அங்கிருந்து உள் வீதியினூடாக கல்கொட்டுவ கருடாகல நோக்கி செல்லும் வேளையில், முச்சக்கரவண்டி மீது மரத்துடன் கூடிய கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 5 பேர் படுங்காயங்களுடன் உடபுஸ்ஸலாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடபுஸ்ஸலாவ மஸ்பன்ன பகுதியை சேர்ந்த 40 வயதுடைய நிஷாந்த ஜெயகொடி மற்றும் 28 வயதுடைய சுசில் குமார ஜெயகொடி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக உடபுஸ்ஸலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உடபுஸ்ஸலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.