தந்தை கமல் தனது 64வது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் அதே நாளில் சிறிதும் மனசாட்சியின்றி, அவரது இளையமகள் அக்ஷரா ஹாஸனை மும்பை சைபர் கிரைம் போலீஸை நோக்கி அலையவிட்டுக்கொண்டிருக்கிறார்கள் சில காமக்கொடூரன்கள்.
சில தினங்களுக்கு இணையங்களில் அக்ஷரா ஹாசனின் அந்தரங்க படங்கள் சில அவரது அனுமதியின்றி வெளியாகின. ‘என் அனுமதியின்றி அப்படங்கள் எப்படி வந்தன’ என்று புலம்பிய அக்ஷரா அவற்றை கூடுமானவரை முடக்கிவிட்டு, ‘ஒரு சிறு பெண்ணாகிய எனக்கு இந்த அநீதியைச் செய்யலாமா?’ என்று பரிதாபமாக ட்விட் பண்ணியிருந்தார்.
ஆனால் முடக்கப்பட்டதையும் அப்படங்கள் வெவ்வேறு வலைதளங்களில் தொடர்ந்துவெளிவந்தவண்ணம் உள்ளன. இதனால் அதிர்ந்துபோன அக்ஷரா நேற்று தனது தந்தையின் பிறந்தநாள் என்பதையும் பொருட்படுத்தாமல் மும்பை சைபர் கிரைம் போலீஸ் புகார் செய்தார்.
’’சமீபத்தில் எனது அந்தரங்கமான படங்கள் சில இணையங்களில் கசிந்தன. யார், எதற்காக இதைச் செய்கிறார்கள், இதன்மூலம் அவர்கள் சாதிக்கவிரும்புவது என்ன என இதுவரை எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஓர் இளம் பெண்ணை இத்தனை கடுமையான பாதிப்புக்கு ஆளாக்குவது, ஒரு வக்கிரமான மனதுடையவனுக்கு மட்டுமே மகிழ்ச்சியைத் தரும். குறிப்பாகச் சொல்வதென்றால், இந்திய நாடு #மீ டூ விவகாரம் குறித்து எழுச்சி பெற்று விவாதித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் வெளியான போட்டோக்களை இவ்வளவு வேகமாகப் பகிர்வதற்கும் ஆட்கள் இருக்கின்றனர் என்று பார்க்கும்போது, அந்த வக்கிர புத்தி கொண்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
இதுகுறித்து மும்பை போலீஸாரிடமும், சைபர் கிரைமிலும் புகார் செய்திருக்கிறேன். குற்றவாளிகள் எவ்வளவு அதலபாதாளத்தில் பதுங்கி இருந்தாலும் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும். மற்றவர்களின் அந்தரங்க வாழ்வில் தலையிடுவதும் கண்டிப்பாக ஒருவகை பாலியல்குற்றம்தான்’என்கிறார் இந்த குட்டிஹாஸன். தங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இச்செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்ருதிஹாஸன்.