மதுரை அரசு மருத்துவமனையில் இறந்த நோயாளி ஒருவரின் உடலை உறவினா்களிடம் ஒப்படைக்க பட்டாசுகளை லஞ்சமாக பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சல் பாதிப்பால் நாளுக்கு நாள் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில் மதுரையைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவா் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் உயிரிழந்த நிலையில் அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டு இருந்தது.
உடற்கூறு ஆய்வுகள் நிறைவடைந்த நிலையில் உடலை பெற வந்த உறவினா்களிடம் மருத்துவமனை ஊழியா் ஒருவா் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சத்தை பணமாக கொடுப்பதற்கு பதில் பட்டாசாக கொடுக்குமாறு ஊழியா் தொரிவித்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த உறவினா்கள் வேறு வழியின்றி ரூ.1,500 மதிப்பில் பட்டாசுகளை கொடுத்துவிட்டு உடலை பெறும் காட்சிகள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.