ஜெயலலிதா பெயர் கோமளவள்ளி கிடையாது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம், முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ளது. இதில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இதில் வரலட்சுமியின் கதாபாத்திரத்தின் பெயர் கோமளவள்ளி. பெற்ற தந்தைக்கே விஷம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு கோமளவள்ளியின் கதாப்பாத்திரம் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இது ஜெயலலிதாவின் இயற்பெயர் எனச் சர்ச்சை எழுந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘ஜெயலலிதா பெயர் கோமளவள்ளி கிடையாது என்பது எனக்கே தெரியும். 2002 அல்லது 2003ல் காங்கிரசை சேர்ந்த ஒருவர், ஜெயலலிதாவை கோமளவள்ளி எனக் கூறி விமர்சனம் செய்தார். அப்போது ஜெயலலிதாவே என்னிடம், ஏன் கோமளவள்ளி என்று சொல்கிறார்கள்.
நான் திரைப்படத்தில் கூட அப்படி ஒரு கதாப்பாத்திர பெயரில் நடிக்கவில்லையே, ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்று என்னிடம் கேட்டார். அமைச்சர்கள் படம் பார்த்துவிட்டு கருத்து கூறுகிறார்களா என்று தெரியவில்லை. நான் படம் பார்த்துவிட்டு, ஜெயலலிதாவிற்கு எதிராகப் படத்தில் காட்சிகள் இருந்தால் கருத்து சொல்வேன்’ என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்
.