மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லாததால் விஜய் போன்ற நடிகர்களுக்கு குளிர் விட்டு போய்விட்டது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வீரமாமுனிவரின் 338-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வருக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லாததால் விஜய் போன்ற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு குளிர் விட்டு போய் விட்டது. சர்கார் படத்தில் காழ்புணர்ச்சி காரணமாக ஜெயலலிதாவின் இயற்பெயரை வைத்துள்ளனர் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், நடிகர்களுக்கு முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பது தவறில்லை. ஆனால், தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக மற்றவர்களை புண்படுத்துவது நியாமாக இருக்காது. சினிமாவில் நடிகர்கள் எம்ஜிஆர் போன்று ஆகி விட முடியாது. எம்ஜிஆர் போன்ற அங்கீகாரத்தை மக்கள் இவர்களுக்கு வழங்க மாட்டார்கள் என்றார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகளானது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், பண மதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றியா தோல்வியா என்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
சர்கார் படம் வெளியாவதற்கு முன்பிருந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்த நிலையில், தற்போது படம் ரிலீசான பிறகும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்ற பெயரை வில்லி கதாபாத்திரமான வரலட்சுமிக்கு வைத்தது, படத்தில் அரசின் இலவசங்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஆளுங்கட்சி அமைச்சர்கள் ஆலோசனைக்கு பின்னர் வழக்கு தொடரப்படும் எனவும் கூறியுள்ளனர்.
முன்னதாக, விஜய் நடித்த தலைவா திரைப்படத்திற்கு அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தடை ஏற்படுத்தியது. அந்த திரைப்படத்தின் தலைப்பில் இடம்பெற்றிருந்த “the time to lead” என்ற வாசகத்தால், ஜெயலலிதா அதிருப்தி அடைந்து தடை ஏற்படுத்தினார் என கூறப்பட்டாலும், கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு விஜய் மக்கள் இயக்கம் தான் காரணம் என அவரது தந்தை அளித்த பேட்டிதான் பிரதான காரணமாக பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது