சீனா, இந்தியாவுடனான இலங்கையின் உறவுகள் குறித்து பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியா டுடேக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
”இலங்கையில் பல உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு சீனா உதவியுள்ளது. இந்தத் திட்டங்கள் முற்றிலும் வணிக நோக்கம் கொண்டவை.
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தல விமான நிலையத் திட்டங்கள் முதலில் இந்தியாவிடம் தான் கொடுக்கப்பட்டன. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
அரசியல்வாதிகள் என்ற வகையில், எமது மக்களின் நலனைநாங்கள் கவனிக்க வேண்டும். எனவே,நாங்கள் சீனாவுக்குச் சென்றோம். அவர்கள் முன்வந்தனர். உடனடியாகத் திட்டங்களை அறிவித்தனர். ஆனால் இவை எல்லாமே வணிக நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.
எனது தந்தை அதிபராக இருந்த போது, சீனாவுடன் மாத்திரமன்றி, பல நாடுகளுடன் பலமான இருதரப்பு உறவுகளை ஏற்படுத்தியிருந்தார்.
ஐரோப்பிய நாடுகள், மற்றும் இந்தியா, சீனாவும் கூட இலங்கையில் அதிக முதலீடுகளை செய்தன.
சீனா, இந்தியாவுடனான இலங்கையின் உறவுகள் குறித்து பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர் புதிய அரசாங்கம், இந்தியாவுடன் வலுவான- நெகிழ்வான உறவுகளைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தும் ”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.