அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்கள் தற்போது திட்டமிட்ட வகையில் முன்வைக்கப்பட்டு வருவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு கடிதம் அனுப்பியிருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேளிவிகளுக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடுகளில் சரிகள், பிழைகள் இருக்கலாம். அது மறுப்பதற்கில்லை.
ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவருக்கு எதிரான கருத்துக்கள் தற்போது திட்டமிட்ட வகையில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய செயற்பாடுகள் தொடர்பில் சுமந்திரனுக்கு ஆதங்கம் இருப்பது இயற்கையானது தான். ஆனால் அந்த ஆதங்கத்தை நாகரீகமாக அல்லது அந்த சில வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம் என்ற கருத்தும் இருக்கின்றது.
அடுத்தது கட்சியில் இருந்து சுமந்திரன் நீக்கப்பட வேண்டுமென சிவசேனை தலைவர் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அவர் ஏற்கனவே கூட்டமைப்பிற்கு எதிரான கருத்துக்களைச் சொல்லி வந்திருக்கின்றார்.
சிவசேனைக்கும் இதுக்கும் எந்தவிதமான தொடர்பும் இருக்க தேவையில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.