தன்னை தானே சாமியார் என்று சொல்லிக் கொண்ட சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அறிவித்துள்ளது.
எம்ஏ பட்டதாரியான சதுர்வேதி, வேதம் மற்றும் இந்து தத்துவவியல் பற்றி சொற்பொழிவு ஆற்றி வந்தவர். இதனால் இவருக்கு நிறைய பக்தர்கள் வெகுசீக்கிரத்திலேயே உருவானார்கள். இவருக்கு வேற பெயர்களும் உள்ளன. அதாவது வெங்கடாசரவணன், பிரசன்ன வெங்கடாச்சாரியார் என்று பல பெயர்களை ஒவ்வொரு இடத்திலும் சொல்லி வந்தார். ஆழ்வார்பேட்டையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையும் நடத்தி வந்தார்.
அதோடு தான் ஒரு மிகச்சிறந்த சாமியார் என்றும் சொல்லிக் கொண்டே இருப்பார்.இவரை நிஜமான சாமியார் என்று நம்பி கடந்த 2004-ம் ஆண்டு ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி மற்றும் அவரது மகள் இவரை சந்திக்க வந்திருக்கிறார்கள். அப்போது தாய் – மகள் என இரண்டு பேரையுமே சதுர்வேதி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அத்துடன் அந்த 2 பேரையும் கூட்டிக் கொண்டு தலைமறைவாகியும் விட்டார். அத்துடன் சுரேஷிடம் லட்சக்கணக்கில் பணத்தை அறக்கட்டளை என்ற பெயரில் பிடுங்கி கொண்டதாகவும், சுரேஷின் இடத்தையும் ஆக்கிரமித்து கொண்டதாகவும் பலமான புகார் சாமியார் மீது எழுந்தது. அப்போது எஸ்கேப் ஆனவர் தான் இவர், ரொம்ப வருஷத்துக்கு இவரை யாராலும் பிடிக்கவே முடியவில்லை.
ஒருவழியாக கடந்த 2016-ம் ஆண்டு சதுர்வாதி கைது செய்யப்பட்டார். ஆனால் கொஞ்ச நாளிலேயே ஜாமீனில் வந்தவர்தான் திரும்பவும் ஆள் எஸ்கேப். சென்னை மகளிர் கோர்ட்டில் 14 வருடங்களாக நடந்து வரும் இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வர போகிறது. அதனால் சாமியாரை தேடப்படும் குற்றவாளியாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அறிவித்துள்ளது.
இவர் எப்பவும் வடமாநிலங்கள் பக்கம் அடிக்கடி ஆன்மீக டூர் போவாராம். அதிலும் நேபாளத்துக்குதான் அதிகமாக போவார் என்பதால் அங்கு போலீசார் விரைந்திருக்கிறார்கள். மேலும் வேறு எங்கேயும் இவர் தப்பி சென்றுவிடக்கூடாது என்பதால் நாடு முழுவதும் உஷார் நிலை வைக்கப்பட்டுள்ளது. அதற்காக சதுர்வேதியின் புகைப்படங்கள் எல்லா விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் முன்னெல்லாம் சாமியார் தாடி, மீசையுடன்தான் இருப்பாராம்.
இப்போது போலீசார் சாமியாரின் அறக்கட்டளை ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதில் தாடி, மீசை இல்லாத மழ மழ சதுர்வேதி படங்களை வாங்கி உள்ளனர். இதை வைத்துகொண்டுதான் போலீசார் தீவிரமாக தேட ஆரம்பித்துள்ளனர். இந்த படங்களைதான் நாடு முழுவதும் அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே பல பல பெயர்களில் நடமாடி வரும் சதுர்வேதி, இப்போது கெட்-அப் சேஞ்ச் செய்து எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. தேடும் படலம் தொடர்கிறது!!