தமிழகத்திலிருந்து இலங்கை செல்லவிருந்த விமானம் சுமார் 9 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால், தன்னுடைய உடன் பிறந்த சகோதரரின் இறப்புக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை என்று பயணி ஒருவர் வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் மதுரை மாவட்டத்திலிருந்து, இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு ஸ்பைஸ் ஜெட் என்ற பயணிகள் விமானம் நள்ளிரவு 12.50 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.
ஆனால் விமானம் அதிகாலை 3 மணிக்கு புறப்படும் என்றும், அதன் பின் காலை 7 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இறுதியாக 9.50 மணிக்கே புறப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12.50 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 9 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால், அதில் பயணிக்கவிருந்த 68 பயணிகள் வேதனையடைந்தனர்.
அதுமட்டுமின்றி இதில் பயணிக்கவிருந்த ஈரோட்டைச் சேர்ந்த குமரவேல் என்ற 56 வயது பயணி , தமது உடன் பிறந்த சகோதரரின் இறப்புக்குக் கூட உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை என்று வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் என்னுடைய சகோதரரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் டிக்கெட் புக் செய்தேன்.
அந்த டிக்கெட்டின் மதிப்பு 22,000 ரூபாய், கடைசியாக அவனுடைய முகத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன், ஆனால் இப்படி நடந்துவிட்டதே, உரிய நேரத்தில் என்னால் செல்ல முடியவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளனர்.
இது குறித்து விமானம் நிறுவனம் தெரிவிக்கையில், விமானத்தை இயக்குவது தொடர்பான காரணங்களால் தாமதம் ஏற்பட்டதாகவும், அதன் பின் காலையில் வேறு விமானம் மூலம் பயணிகளை கொழும்புவிற்கு அனுப்பி வைத்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது.