காதலனுக்கும் காதலிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் காதலி நஞ்சருந்தி மரணித்தமை தொடர்பில் இளைஞரை (10ஆம் திகதி) கைது செய்து பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர் மூதூர் கங்குவேலி பகுதியைச் சேர்ந்த சண்முகராஜா சதீஸ்வரன் ( 22 வயது) உடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
9ஆம் திகதி அம்பாறை பகுதியிலிருந்து மட்டக்களப்பு ஊடாக சேருநுவர பகுதிக்கு வருகைதந்திருந்த யுவதி தனது காதலனுக்கு தன்னை சந்திப்பதற்காக சேருநுவர பகுதிக்கு வருமாறு கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து தான் அவ்விடத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் உடனடியாக அவ்விடத்துக்கு வருமாறு கூறியுள்ளார்.
இதேவேளை காதலனான சண்முகராஜா சதீஸ்வரன் என்ற இளைஞன் அவ்விடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்துள்ளார்.
அதனையடுத்து இருவருக்குமிடையில் சிறு நேரம் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும் அதனையடுத்து இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாகவும் அதேநேரம் காதலியான 18 வயது யுவதி அருகிலுள்ள மரத்தடிக்குச் சென்றதாகவும் மரத்தடியிலிருந்து வராததை அடுத்து அவ்விடத்துக்குச் சென்ற போது காதலியான ஆனந்தன் ரஜனி என்ற யுவதி நஞ்சருந்தி கொண்டிருப்பதை அவதானித்ததாகவும் அவரின் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை உடனடியாக மோட்டார் சைக்கிளில் யுவதியை ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள சேருநுவர பிரதேச வைத்தியசாலைக்கு சென்றதாகவும் இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரியவருகின்றது.
இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழந்த யுவதியின் சடலம் தற்பொழுது மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த யுவதி அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த வகியல. அலியார் வெட்டை, விளாந் தோட்டம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் ரஜினி (18 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காதலனை கைது செய்துள்ளதுடன் மரண விசாரணைகளை மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. ஜே.எம். நூருல்லாஹ் மேற்கொண்டார்.
இம்மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சடலத்தைக் கொண்டு செல்லுமாறும், குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் சேருநுவர பொலிஸாருக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி நூருல்லாஹ் கட்டளையிட்டுள்ளார்.