தமிழகத்தில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக இளம்பெண் கிடந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த காதலன் பொலிசில் சரணடைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மாலதி (20). இவர் கடந்த ஜூன் மாதம் 29-ஆம் திகதி வீட்டிலிருந்து மாயமானார்.
இது குறித்து அவர் பெற்றோர் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் மாலதியை தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 13–ந் திகதி அங்குள்ள கண்மாய் பகுதியில் அழுகிய நிலையில் எலும்புகூடு எரிந்த நிலையில் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அருகில் கிடந்த துப்பட்டாவை வைத்து விசாரித்ததில் அது மாயமான மாலதியின் துப்பட்டா என்பதை குடும்பத்தினர் உறுதிசெய்தனர்.
பொலிசாரின் விசாரணையில் மாலதிக்கும், சிவக்குமார் (30) என்பவருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் அவரை பிடித்து பொலிசார் விசாரித்த நிலையில் தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.
இதோடு மாலதியின் உடல் உறுப்புகள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதால் அதன் உறுதியான முடிவு வராத வரை அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியாததால் சிவக்குமாரை பொலிசார் கைது செய்யவில்லை.
அப்போது சிறையில் இருந்த சக கைதிகளிடம் மாலதியை கொலை செய்தது குறித்து சிவக்குமார் கூறினார்.
தவறு செய்தது உண்மையாக இருந்தால் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று சிறையில் உடன் இருந்தவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
இதன்பின் ஜாமீனில் வெளிவந்த சிவக்குமார் நேற்று முன்தினம் பொலிசிடம் சரணடைந்தார்.
இதையடுத்து பொலிசாரிடம் திடுக்கிடும் வாக்குமூலத்தை அவர் அளித்துள்ளார்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், சிவக்குமார், தேன்மொழி என்ற உறவுக்கார பெண்ணை திருமணம் செய்த நிலையில் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
அவர் வெளிநாடு சென்று சில காலம் பணி செய்துவிட்டு ஊருக்கு திரும்பிய நிலையில் உள்ளூரில் நிதிநிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கணவன்–மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
அந்த சமயத்தில் சென்னைக்கு ரெயிலில் சென்றபோது மாலதியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று அவரிடம் சிவக்குமார் பொய் கூறியுள்ளார்.
அந்த சமயத்தில் அவருக்கும் மனைவி தேன்மொழிக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ தொடங்கி உள்ளனர்.
இதனால் சிவக்குமார் மாலதியிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் மாலதி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சிவக்குமாரை தொந்தரவு செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 29–ந் தேதி மாலதி பிரச்சினைக்கு முடிவுகட்டவேண்டும் என்று சிவக்குமாரை தேடி வந்துள்ளார்.
இதை அறிந்து சிவக்குமார் நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு மாலதியை சந்தித்துள்ளார். இருவரும் பேசிக்கொண்டே சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மாலதி தான் தயாராக கொண்டு வந்த தாலியை தன் கழுத்தில் கட்டி மனைவியாக்கி கொள்ளுமாறு கூறியுள்ளார். இதற்கு சிவக்குமார் மறுத்ததால் தகராறு வெடித்துள்ளது. ஒரு கட்டத்தில் நிலைமையை சமாளிக்க முடியாமல் தவித்த சிவக்குமார் மாலதியை பலமாக தாக்கி உள்ளார். கீழே விழுந்ததும் அவரின் துப்பட்டாவை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதன்பின்னர் வீட்டிற்கு சென்று கேனில் மண்எண்ணெய் எடுத்து வந்து முள் செடிகளின் மேல் மாலதியை போட்டு தீவைத்து எரித்துள்ளார்.
அவர் வைத்திருந்த கைப்பை, தாலி, மண்எண்ணெய் கேன் முதலியவற்றை அருகில் குழி தோண்டி புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் வீட்டிற்கு சென்றுவிட்டது தெரியவந்தது.
இதனிடையில் டி.எம்.ஏ சோதனை முடிவில் இறந்தது மாலதி தான் என உறுதியாகியுள்ளது.
எலும்புக்கூடாக எரிக்கப்பட்ட நிலையில் மாலதி கிடந்த சம்பவத்தில் குற்றவாளி யார் என்று தெரியாமல் இருந்து வந்த நிலையில் 4 மாதங்களுக்கு பின்னர் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.