அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் ஹாலிவுட் பிரபலங்கள் சிலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
கடந்த 8ஆம் திகதி முதல் கலிபோர்னியா மாகாணத்தின் சாக்ரமண்டோ நகருக்கு வடக்கே காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. சுமார் 50 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியதன் மூலம், பரவிய இந்த கோர காட்டுத்தீயினால் சில மணிநேரங்களிலேயே 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு எரிந்துவிட்டது.
அத்துடன் 6,700க்கும் மேலான வீடுகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த தீயில் சிக்கி இதுவரை 42 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், ஹாலிவுட் நட்சத்திரங்களான லேடி காகா மற்றும் கிம் கர்தாஷியன், கன்யே வெஸ்ட் ஆகியோரின் வீடுகள் இந்தக் காட்டுத் தீ காரணமாக சேதமடைந்தன. தங்கள் வீடுகளின் தீயை அணைக்க தனியார் தீயணைப்பு வீரர்களை அவர்கள் அமர்த்தினர்.
ஆனால் கட்டுக்கடங்காமல் காட்டுத் தீ பரவுவதால் அதனை அணைக்க, விமானங்கள் மூலம் ரசாயான பொடியை தூவும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது ஓரளவு தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரபல ஹாலிவுட் ஹீரோ ஜெரார்டு பட்லர், தனது வீடு முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார். பாப் பாடகியும், நடிகையுமான மைலி சைரஸின் வீடும் எரிந்து சாம்பலாகியுள்ளது. அவர் தனது செல்லப்பிராணிகளுடன் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் விருது பெற்ற ‘தி ஷேப் ஆப் வாட்டர்’ படத்தின் இயக்குநர், கதாசிரியர் குயில்லெர்மோ டெல் டோரோவின் வீடும், விக்டர் பர்க் மற்றும் லயாம் ஹெம்ஸ்வொர்த் ஆகிய பிரபலங்களின் வீடுகளும் தீயினால் எரிந்துள்ளது.